/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொத்தமல்லி அறுவடை துவக்கம் விற்பனை கூடத்திற்கு வரத்தும் அதிகரிப்பு
/
கொத்தமல்லி அறுவடை துவக்கம் விற்பனை கூடத்திற்கு வரத்தும் அதிகரிப்பு
கொத்தமல்லி அறுவடை துவக்கம் விற்பனை கூடத்திற்கு வரத்தும் அதிகரிப்பு
கொத்தமல்லி அறுவடை துவக்கம் விற்பனை கூடத்திற்கு வரத்தும் அதிகரிப்பு
ADDED : ஜன 24, 2025 10:12 PM

உடுமலை, ; உடுமலை பகுதிகளில், கொத்தமல்லி அறுவடை துவங்கியுள்ள நிலையில், ஒழுங்கு முறை விற்பனை கூட உலர் களத்தில் காயவைத்து, விற்பனைக்கு விவசாயிகள் தயார் செய்து வருகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், கரிசல் மண் சாகுபடி நிலங்களை கொண்ட, கணபதிபாளையம், அந்தியூர், வெனசப்பட்டி, பூலாங்கிணர், வாளவாடி, பொட்டையம்பாளையம், தொட்டம்பட்டி, விருகல்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மானாவாரி பயிராகவும், பருவமழையை ஆதாரமாகக்கொண்டு கொத்தமல்லி பயிரிடப்பட்டு வருகிறது. 90 நாட்கள் சாகுபடி காலம் கொண்ட இச்செடிகள், அறுவடை செய்யப்பட்டு, அதிலிருந்து 'மல்லி' மட்டும் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு, 8 கிலோ விதை துாவப்பட்டு, மானாவாரி சாகுபடியில், களையெடுத்தல் மற்றும் மருந்து மட்டும் தெளிக்கப்படுகிறது.
நடப்பு பருவத்தில், விதைப்பு துவங்கியதும், வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்ததால், செழிப்பாக வளர்ந்துள்ளது. இருப்பினும், கொத்தமல்லி செடிகளுடன், களைச்செடிகளும் அதிகளவு முளைத்து, விவசாயிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
போதிய ஆட்கள் கிடைக்காத நிலையில், களையெடுத்தலுக்கு அதிக செலவானது. தற்போது இப்பகுதிகளில், கொத்தமல்லி அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது.
மல்லியை தரம் பிரித்து, உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, அங்குள்ள உலர்களங்களில், காய வைத்து வருகின்றனர். இதனால், கொத்தமல்லி மணம் வீசி வருகிறது.
ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: உடுமலை பகுதிகளில் கொத்தமல்லி அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. விவசாயிகள், ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்திலுள்ள உலர்களங்களில், அறுவடை செய்த கொத்தமல்லியை காய வைத்து, தேசிய வேளாண் சந்தையான இ-நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைப்பதோடு, விளைபொருளுக்குரிய தொகை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதனால், இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, உலர்களங்களையும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

