/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபங்கள் சுடர் விடும் வீதிகள் ஒளிர்ந்திடும்
/
தீபங்கள் சுடர் விடும் வீதிகள் ஒளிர்ந்திடும்
ADDED : டிச 12, 2024 11:51 PM

திருப்பூர்; இன்று திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பூர் பகுதி கோவில்களில் தீபம் ஏற்றப்படுகிறது; இல்லங்களில் தீபங்கள் ஒளிரப்போகின்றன.
கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று மாலை, மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும்.
அதன் பின் அனைத்து கோவில்களிலும், வீடுகளிலும் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடுகள் நடக்கும்.கோவில்கள் முன்புறம் உள்ள தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்படும். நேற்று இதற்கு தயார் செய்யும் வகையில், மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தீபஸ்தம்பங்கள் சுத்தப்படுத்தி, கோலமிட்டு அலங்கரிக்கப்பட்டன. இவற்றில், வாழை மற்றும் வேப்பிலை தோரணம் கட்டி இன்று புதிய மண் பானையில் பெரிய அளவிலான திரி அமைத்து, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றப்படும்.தீபத்திருவிழாவையொட்டி நேற்று கடைவீதிகள் மற்றும் மார்க்கெட் கடைகளில் தீபங்கள், எண்ணெய், திரி, பூமாலைகள் மற்றும் பூஜைப் பொருட்கள் விற்பனை பரபரப்பாக காணப்பட்டது.
இன்று கோவில்கள் மற்றும் இல்லங்கள் தீபங்களால் ஒளிரப்போகின்றன.
பூக்கள் விலை உயர்வு
திருப்பூர், பூ மார்க்கெட்டில், வழக்கமாக அரளி பூ கிலோ, 200 - 300 ரூபாய்க்கு விற்கப்படும். நேற்று காலை முதலே பூக்களை வாங்க மொத்த வியாபாரிகள் பலர் குவிந்ததால், அரளி பூ கிலோவுக்கு, 150 ரூபாய் உயர்த்தப்பட்டு, 450 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
செவ்வந்தி, 200 - 250, மல்லிகை பூ, 300 - 400, முல்லை பூ, 200 - 250, காக்கடா பூ, 150 ரூபாய்க்கு விற்றது. அரளி பூ விலை உயர்வால், அரளியுடன் சேர்த்து மாலை கட்ட பயன்படும் துளசிக்கும் மவுசு கூடியது. வழக்கமாக, மூன்று கட்டு, 20 ரூபாய்க்கு விற்கப்படும் துளசி இலை, நேற்று ஒரு கட்டு, பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டது.

