/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுட்டெரிக்குது வெயில்! குளிர்பானங்கள் விற்பனை 'சூடு பிடிக்கிறது': தரமானதாக வாங்க அதிகாரிகள் 'அட்வைஸ்'
/
சுட்டெரிக்குது வெயில்! குளிர்பானங்கள் விற்பனை 'சூடு பிடிக்கிறது': தரமானதாக வாங்க அதிகாரிகள் 'அட்வைஸ்'
சுட்டெரிக்குது வெயில்! குளிர்பானங்கள் விற்பனை 'சூடு பிடிக்கிறது': தரமானதாக வாங்க அதிகாரிகள் 'அட்வைஸ்'
சுட்டெரிக்குது வெயில்! குளிர்பானங்கள் விற்பனை 'சூடு பிடிக்கிறது': தரமானதாக வாங்க அதிகாரிகள் 'அட்வைஸ்'
ADDED : மார் 05, 2026 02:43 AM

திருப்பூர்: கோடை காலம் துவங்கி உள்ளதால், பொதுமக்கள், தரமான பழச்சாறு, குளிர்பானங்களை மட்டுமே வாங்கி அருந்த வேண்டும் என, உணவுபாதுகாப்புத் துறை அறிவுறுத்துகிறது.
கோடை துவங்கிய நிலையில், திருப்பூர் நகர பகுதிகளில், சில நாட்களாக, பகல் வேளைகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலுக்கு இதமாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், நீராகாரங்கள் வாங்கி அருந்துகின்றனர். திருப்பூரிலுள்ள பழமுதிர் நிலையங்கள், பேக்கரிகளில், குளிர் பானங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. ரோட்டோரம் தற்காலிக குளிர்பானங்கள் விற்பனை தள்ளுவண்டி கடைகளும் முளைத்து வருகின்றன.
தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு, முலாம்பழம் உள்ளிட்ட பழ வகைகள், சோடா சர்பத், பழ சர்பத் என விதவிதமான சர்பத்கள், லெமன் ஜூஸ், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தரமற்ற, செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட, காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், உணவு பதுகாப்புத்துறை உஷார் படுத்துகிறது.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கியுள்ள 'அட்வைஸ்' பின்வருமாறு:
கோடை வெயில் வாட்டிவருவதால், வெளியே செல்லும்போது குடை, தொப்பி, காலணிகளை பயன்படுத்துவது நல்லது.
வீடுகளில், காலை, மாலை வேளைகளில் ஏ.சி.,யை தவிர்த்து, ஜன்னல், கதவுகளை திறந்து, காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும்.
உடலில் நீர்ச்சத்து குறையும் வாய்ப்பு உள்ளதால், சீரான இடைவெளியில் நீராகாரங்கள் பருக வேண்டும். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் (250 மில்லி) வீதம், நாளொன்றுக்கு 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.
வெயிலில் வெளியே சென்று விட்டு வந்த உடனேயே, பிரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீர், குளிர்பானங்களை பருகக் கூடாது. உடலின் வெப்பநிலை சமமான பின், பருகலாம்.
பழங்கள், பழச்சாறு, இளநீர், மோர், நுங்கு, நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, தர்பூசணி உட்கொள்ள வேண்டும்.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற்ற கடைகளில் மட்டுமே பழச்சாறு மற்றும் உணவுப்பொருட்களை வாங்கவேண்டும்.
பாட்டில் குடிநீர், பாக்கெட் உணவுப்பொருட்களின் லேபிளில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எண், பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளரின் முழு முகவரியை சரிபார்த்து வாங்குவது அவசியம்.
பழங்களின் தோலில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது; எனவே அவற்றை நன்றாக கழுவிய பின் பயன்படுத்த வேண்டும்.
சுகாதாரமற்ற கடைகளில், ஈ மொய்க்கும் பண்டங்கள், பழங்கள், பழச்சாறுகளை வாங்கக்கூடாது.
ரசாயன நிறம், சுவையூட்டிகள் கலந்தபழச்சாறு, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
செயற்கையாக அதிக சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை நிறமூட்டப்பட்ட பக்கோடா, பஜ்ஜி, சிக்கன் - 65 உள்ளிட்ட தின்பண்டங்களை உண்ணக்கூடாது.
செயற்கைாக கல் வைத்து பழக்கவைக்கப்பட்ட பழங்களை வாங்க கூடாது. இதனால், உடல் உபாதைகள் ஏற்படும்.
அ னைத்துவகை குளிர் பானங்கள் தயாரிப்புக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தவேண்டும். தரமான குளிர்பானங்களை, சுகாதாரமான இடங்களில் வைத்து விற்பனை செய்யவேண்டும். செயற்கையாக பழுக்கவைத்த பழங்கள் விற்பனை செய்யக்கூடாது.
குளிர்பான விற்பனை கடைகளில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு, தரமற்றவகையில் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை குறித்து தெரியவந்தால், 94440 42322 என்கிற எண்ணில் 'வாட்ஸ் அப்' வாயிலாக, புகார் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

