/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தைக்கு ஆடு வரத்து குறைகிறது!
/
சந்தைக்கு ஆடு வரத்து குறைகிறது!
ADDED : மே 09, 2025 06:42 AM

பல்லடம்: பல்லடம் பகுதியில் நடந்து வரும் ஆட்டுச் சந் தைக்கு ஆடுகளின் வரத்து குறைந்து வருகிறது.
பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள கடைவீதி, வட்டார பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடும் இடமாக உள்ளது. வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற்று வரும் வார சந்தைக்கு, வட்டார பகுதியில் வசிக்கும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள் பங்கேற்று பயனடைகின்றனர்.
சிறு மற்றும் குறு வியாபாரிகளும் பயன் பெற்று வருகின்றனர். ஏராளமான பொதுமக்கள் கூடும் கடைவீதியில், சத்தமின்றி ஆட்டுச் சந்தையும் நடந்து வருகிறது. வாரச்சந்தை நடக்கும் நாளில், அதிகாலை, 4:30 முதல் 6:30 மணி வரை ஆட்டுச் சந்தை நடந்து வருகிறது.
ஆனால், கால்நடை வளர்க்கும் விவசாயிகளை போதிய அளவு ஊக்கப்படுத்தாததால், ஆடுகளின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருவதாக, பல்வேறு தரப்பிலும் கருத்து எழுந்துள்ளது.
இது குறித்து, கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கூறியதாவது:
மாவட்டத்தில் குண்டடம், குன்னத்துார் சந்தைகள்தான் கால்நடை சந்தைக்கு பெயர் பெற்றவை. ஆட்டு குட்டிகள், கிடாக்கள் உள்ளிட்டவை, 500 ரூபாய் முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் விலைக்கு விற்கப்படுகிறது.
ஆட்டுக்குட்டிகளின் வரத்து அதிகமானால், விலையும் குறையும். பல்லடம் சந்தைக்கு, முந்தைய காலங்களில் அதிக எண்ணிக்கையில், ஆடுகள் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தன.
கன்றுக்குட்டிகள், குதிரைகளும் கூட முன்பு விற்பனையாகி வந்தன. உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆர்வம் காட்டாததால், எண்ணிக்கை குறைந்து, பெயரளவுக்கு மட்டுமே சந்தை நடந்து வருகிறது.
தற்போது, ஆட்டுச் சந்தை மட்டுமே நடந்து வரும் நிலையில், விரல் விட்டு என்னும் அளவுதான் ஆடுகளின் வரத்து உள்ளது. ஆட்டுச் சந்தைக்கு என பிரத்யேக இடம் கிடையாது.
ரோட்டில் வைத்து தான் ஆடுகளை விற்பனை செய்து வருகிறோம். இதற்கும் கூட சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. ஆட்டுச் சந்தையை மேம்படுத்த, கால்நடை விவசாயிகளை வரவழைக்க ஊக்கப்படுத்த வேண்டும்.
இதற்கென பிரத்யேக இடம் ஒதுக்கீடு செய்து, பொதுமக்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் வாயிலாக, சந்தை மேம்படுவதுடன், கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

