/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அச்சுறுத்தும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்: சமாளிக்க வழி சொல்கிறது வேளாண் துறை
/
அச்சுறுத்தும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்: சமாளிக்க வழி சொல்கிறது வேளாண் துறை
அச்சுறுத்தும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்: சமாளிக்க வழி சொல்கிறது வேளாண் துறை
அச்சுறுத்தும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்: சமாளிக்க வழி சொல்கிறது வேளாண் துறை
ADDED : அக் 29, 2025 12:52 AM

திருப்பூர்: அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் இருந்து, மக்காச்சோள பயிரை பாதுகாக்கும் வழிமுறை குறித்து, வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும், 20 ஆயிரம் எக்டர் பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. கடந்தாண்டு, அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகம் தென்பட்டது. இப்பூச்சி நெல், மக்காச்சோளம் மற்றும் காய்கறி உட்பட, 80 வகையான பயிர்களை தாக்கும் வல்லமை கொண்டது. எனினும், மக்காச்சோளப் பயிரை விரும்பி தாக்கும். ''இப்புழுவின் தாக்குதல், நடப்பாண்டில் அதிகம் இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என, கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து, விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சுந்தரவடிவேலு வழங்கியுள்ள அறிவுரை:
தற்போது, ஆங்காங்கே பெய்து வரும் பருவமழையை பயன்படுத்தி, நிலத்தை ஆழமாக உழுவுவதன் வாயிலாக, மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளிப்பட்டு, சூரிய ஒளி மற்றும் பறவைகளால் படைப்புழு அழிக்கப்படும்; அதோடு, கூட்டுப்புழுவில் இருந்து அந்துப்பூச்சி உருவாவதும் தவிர்க்கப்படும். கடைசி உழவு மேற்கொள்ளும் போது, மண்ணில், ஒரு எக்டருக்கு, 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதன் வாயிலாக, கூட்டுப்புழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, அந்துப்பூச்சி வெளிவருவதை தடுக்க முடியும்.
ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு, 10 கிராம் 'பவேரியா பேசியானோ' என்ற நுண்ணுயிர் பூச்சிக்கொல்லி அல்லது, 10 கிராம் 'தயோமீதாக்சம்' பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இடைவெளி அவசியம் பயிர்கள் நெருக்கமாக இருந்தால் பயிர்களுக்கு இடையே படைப்புழு வேகமாக பரவும். எனவே, இறவை மக்காசோளத்திற்கு வரிசைக்கு வரிசை 60 செ.மீட்டர், பயிருக்கு பயிர், 20 செ.மீ., இடைவெளி; மானாவாரி மக்காச்சோளத்துக்கு, வரிசைக்கு வரிசை, 45 செ.மீட்டர், பயிருக்கு பயிர், 20 செ.மீ., இடைவெளி; 10 பயிர் வரிசைக்கு ஒரு வரிசை, 75 செ.மீ., இடைவெளி விட வேண்டும்; இதனால், பயிர் பாதுகாப்பு எளிதாகும்.
இனக்கவர்ச்சி பொறி விதைத்த, 15ம் நாள், 10 லிட்., நீரில், 20 மி.லிட்டர் அளவில் வேப்ப எண்ணெய் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் அந்துப்பூச்சிகள் முட்டையிடுவதை தடுக்க முடியும். தாய் அந்துப்பூச்சிகள் உள்ளதா என்பதை அறிய, விதைத்த, 3 - 5 நாட்களில், எக்டருக்கு, 12 இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் தாய் அந்துப்பூச்சி தென்பட்டால், அவற்றை கவர்ந்து அழிக்க, எக்டருக்கு, 50 இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும்.
பயிர் சுழற்சி முறை மக்காச்சோளம் விதைக்கும் போது தட்டைபயறு, சூரியகாந்தி, எள், சோளம் மற்றும் சாமந்தி பயிர்களை வரப்பிலும், பயறு வகை பயிர்களை ஊடுபயிராக விதைத்தால், இயற்கை ஒட்டுண்ணிகளும், இரை விழுங்கிகளும் அதிக எண்ணிக்கையில் பெருகி, அமெரிக்கன் படைப்புழுவை தாக்கி அழிக்கும்.
இளம் பயிர்களில் காணப்படும், அந்துப்பூச்சிகளின் முட்டைக்குவியல்கள் மற்றும் இளம் புழு கூட்டங்களை கைகளால் சேர்த்து அழிக்க வேண்டும்.
படைப்புழு அதிகம் தாக்கும் மக்காச்சோளப்பயிரை மீண்டும், மீண்டும் சாகுபடி செய்வதை தவிர்த்து, பயிர் சுழற்சி முறைகளை பின்பற்றினால் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.
உயிரி பூச்சிக்கொல்லி 'மெட்டாரைசியம் அனிசோபிலே' என்ற உயிரியல் பூச்சிக்கொல்லிகளை எக்டருக்கு, 4 கிலோ வீதம் தெளிக்க வேண்டும். ஒரு எக்டருக்கு, 'டிரைக்கோகிரம்மா பிரிட்டோசியம்' என்ற முட்டை ஒட்டுண்ணியை, ஒரு வார இடைவெளியில், 2-3 தடவை மக்காச்சோள வயல்களில் தெளித்தால் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த முடியும்.
முட்டை ஒட்டுண்ணி வெளியிடும் வயல்களில் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக்கூடாது.கைத்தெளிப்பான் பயன்படுத்தி, பயிர் பாதுகாப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும். ஒரு முறை உபயோகித்த பூச்சி மருந்தை, திரும்ப உபயோகிக்க கூடாது. பரிந்துரை இல்லாத ரசாயன பூச்சி மருந்துகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

