/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளைஞர்களின் சிந்தனை புத்தொழிலாக உருவாகும்
/
இளைஞர்களின் சிந்தனை புத்தொழிலாக உருவாகும்
ADDED : அக் 13, 2025 12:46 AM

திருப்பூர்:''இளைஞர்களின் சிந்தனைத்திறனும், படைப்பாற்றலும், புதிய ஸ்டார்ட் அப்களை உருவாக்கும்; அவர்களுக்கு நிதியாதாரமும் எளிதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது'' என்று திருப்பூர் தொழில்துறையினர் கூறுகின்றனர்.
கோவையில் நடந்த உலகப் புத்தொழில் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின், ''ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவிக்க ஏதுவாக, 100 கோடி ரூபாயில் நிதி இணையம் உருவாக்கப்படும்'' என்று அறிவித்துள்ளார். இது, ''நிதி ஆதாரம் கிடைக்காமல் தேங்கும் புத்தொழில் கண்டுபிடிப்புகளுக்கு சரியான வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும்'' என்று, தொழில்துறையினர் கூறுகின்றனர்.
நிதி உதவி கிடைக்கும் செந்தில்குமார், முதன்மை செயல் அலுவலர், 'நிப்ட் - டீ அடல் இன்குபேஷன்' மையம்:
மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலுடன் இயங்கும், திருப்பூர் 'அடல் இன்குபேஷன்' மையத்தில், இதுவரை, 200க்கும் அதிகமான புத்தொழில்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள், வெற்றிகரமாக தொழில் நடத்தியும் வருகின்றனர்.
ஒருவர், புதிய யோசனையில், புத்தாக்கத்தை கண்டறியும் போது, அவற்றை நிரூபணம் செய்யவும், நிதியுதவி தேவைப்படுகிறது. அதற்காக, பல்வேறு திட்டம் வாயிலாக, இரண்டு லட்சம் ரூபாய், ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
புத்தொழில் கண்டுபிடிப்பு நிரூபணமான பிறகு, அவற்றை கொண்டு, மாதிரி உற்பத்தி செய்யப்படும். அதற்கு பிறகு, முதலீடு செய்து தொழில் துவங்க, சரியான கடனதவி வழங்கப்படுகிறது. வாய்ப்பு இருந்தால், முதலீடு செய்ய ஆர்வமுள்ள நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப்படுவர்.
புத்தாக்கம் கண்டறியும் போது, அவற்றை செயல்படுத்த சரியான நிதியுதவி, சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். அதற்கு, முதல்வர் அறிவித்துள்ள நிதி இணையம் பேருதவியாக இருக்கும். அதற்கான முழுமையான வழிகாட்டுதல் கிடைத்த பிறகு, பலரும் பயனடையலாம்.
கை கொடுக்கும் திட்டம் கனகராஜ், பிரின்டிங் உரிமையாளர், நல்லுார்:
பிரின்டிங் துறையில், ஏராளமான புதிய 'இங்க்' வகைகள் வந்துள்ளன. இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான, இயற்கையான முறையில் தயாரிக்கும் 'இங்க்' ரகங்கள் 'ஸ்டார்ட் அப்' மூலம் கண்டறியப்படுகின்றன. அவற்றை, வல்லுனர்கள் முன் சரியான முறையில் விளக்கி, மாதிரி உற்பத்தி செய்து காட்ட நிதியுதவி தேவை. முதல்வர் அறிவித்துள்ள, 'நிதி இணையம்' என்ற 100 கோடி ரூபாய் அறிவிப்பு, இதுபோன்ற நிதி ஆதாரம் இல்லாத, புத்தாக்க திறன் மிகுந்த இளைஞர்களுக்கு சரியான நேரத்தில் கை கொடுக்கும்.
இளைஞர்களிடம் ஆர்வம் மோகன், தலைவர், யங் இண்டியன்ஸ்:
சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளில் மட்டும் 'ஸ்டார்ட் அப்' மாநாடு நடத்துவர்; முதன்முதலாக கோவையில் நடத்தியது. கோவை சுற்றுப்பகுதியில், கல்லுாரிகள் அதிகம் உள்ளன. 'ஸ்டார்ட் அப்' மாநாட்டில், அதிக அளவில், கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். புதிய கண்டுபிடிப்புகளை அதிகம் விசாரித்தனர். பொதுவாக, இளைஞர், இளம்பெண்களிடம் தான், 'ஸ்டார்ட் அப்' ஆர்வம் அதிகம் உள்ளது. அதற்கு, மாநாடு பல்வேறு வகையில் பயனுள்ளதாக இருந்தது. ஜவுளித்துறை மட்டுமல்லாது, பல்வேறு தொழில்களில் வந்துள்ள, புதிய கண்டுபிடிப்புகளை, கண்காட்சி வாயிலாக அறிய முடிந்தது.
கண்டுபிடிப்புகள் பிரமிப்பு மணி, தலைவர், திருப்பூர் தொழில் கூட்டமைப்பு (டிப்):
'ஸ்டார்ட் அப்' என்ற புதிய கண்டுபிடிப்புகளுடன் கூடிய புத்தொழிலில், ஜவுளித்துறை மட்டுமல்ல; இன்ஜினியரிங், ஆட்டோமொபைல்ஸ் உட்பட, அனைத்து தொழில்களும் ஊக்குவிக்கப்படுகிறது. ஜவுளித்தொழிலிலும் புதிய வகை கண்டுபிடிப்புகள், பிரமிக்க வைக்கின்றன. புத்தொழில் மாநாடு கண்காட்சியை திருப்பூர் தொழில் துறையினரும், சரிவர பயன்படுத்திக்கொண்டனர்.
திருப்பூர், அக். 13--
''இளைஞர்களின் சிந்தனைத்திறனும், படைப்பாற்றலும், புதிய ஸ்டார்ட் அப்களை உருவாக்கும்; அவர்களுக்கு நிதியாதாரமும்எளிதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது'' என்று திருப்பூர் தொழில்துறையினர் கூறுகின்றனர்.
கோவையில் நடந்த உலகப் புத்தொழில் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின், ''ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவிக்க ஏதுவாக, 100 கோடி ரூபாயில் நிதி இணையம் உருவாக்கப்படும்'' என்று அறிவித்துள்ளார்.
இது, ''நிதி ஆதாரம் கிடைக்காமல் தேங்கும் புத்தொழில் கண்டுபிடிப்புகளுக்கு சரியான வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும்'' என்று, தொழில்துறையினர் கூறுகின்றனர்.