ADDED : அக் 13, 2025 12:46 AM

திருப்பூர்:அரசு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் பாடங்களை வாசிப்பதில் தடுமாற்றம் ஏற்படுவதால், புதிய புத்தகங்கள் குறித்து ஆசிரியர் - மாணவர் புரிந்து கொண்டு பாடம் கற்பிப்பதற்காக எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்படுகிறது.
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஒன்று முதல் மூன்று மற்றும் நான்கு, ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களில் கல்வி கற்பிப்பது குறித்த எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம், திருப்பூர், 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
திருப்பூர் வடக்கு வட்டாரத்தில் உள்ள துவக்கப்பள்ளிகளை சேர்ந்த, 81 ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராதாமணி வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜூ தலைமை வகித்தார்.
ஒருங்கிணைந்த மாவ ட்ட திட்ட அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் (வடக்கு) ஷியாமளா, பாலமுருகன் ஒருங்கிணைத்தனர். வட்டார வள ஆசிரிய பயிற்றுனர்கள் சக்திவடிவேல்குமார், சுபத்ரா, கோமதி, கருத்தாளர்கள் ரேவதி, லட்சுமணன், சுப்பு லட்சுமி ஆகியோர், 'புத்தகங்களில் உள்ள பாடங்களை குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில், சொல்லித்தர வேண்டும்; அதுவே, ஆசிரியருக்கான பொறுப்பு,' என, பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.