/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., வாய்க்கால் மண் மண்டிய அவலம்
/
பி.ஏ.பி., வாய்க்கால் மண் மண்டிய அவலம்
ADDED : ஜூலை 20, 2025 01:21 AM

பொங்கலுார் : பி.ஏ.பி., நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது. முன்பு பாசனத்திற்காக வழங்கப்பட்டது. தற்போது உயிர் தண்ணீராக மாறி உள்ளது.
திருமூர்த்தி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வெள்ளகோவில் வரை, 124 கி.மீ., பயணித்து கடை மடையை அடைகிறது.
நான்கு மண்டலங்களிலும் கடைமடைக்கு குறைவான தண்ணீரே செல்கிறது. பி.ஏ.பி.,ல் பிரதான வாய்க்கால் முதல் கிளை வாய்க்கால் வரை முழுக்க கான்கிரீட் போடப்பட்டு பாசனம் வழங்கப்படுகிறது. ஆனால் இது பெயரளவில் மட்டுமே உள்ளது.
வாய்க்கால் முழுக்க காரை பெயர்ந்து மண் குவியலாக மாறி உள்ளது. திருமூர்த்தி அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் கடை மடைக்குச் செல்லும் பொழுது பெரும் பகுதி நீர் கசிவு ஏற்பட்டு விரயமாகிறது.
வாய்க்கால் ஓரத்தில் உள்ளவர்களுக்கு பயன் கிடைக்கிறது. தண்ணீர் தேவைக்கு அதிகமாக தேங்குவதால் சிலர் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டும் வருகின்றனர்.
பாசனம் நடக்கும் போதெல்லாம் காங்கயம், வெள்ளகோவில் உட்பட கடைமடை விவசாயிகள் தண்ணீர் வரவில்லை என்று போராடுகின்றனர். தண்ணீர் திருடு போவதாக புகார் கூறுகின்றனர். அதிகாரிகள் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்ற பதிலையே திரும்ப திரும்ப கூறுகின்றனர்.
மண் வாய்க்காலை வைத்துக் கொண்டு அணையில் திறந்து விடும் நீர் கடை மடைக்குச் செல்லும் என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யாத அரசுக்கு எதிராக விவசாயிகள் திரும்பி உள்ளனர்.
முதல்வர் வருகையின் போது கருப்புக்கொடி காட்டவும் கடைமடை விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆனைமலையாறு- - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவது, வாய்க்கால் முழுக்க கம்பி கட்டி கான்கிரீட் போடுவது ஆகியவையே நிரந்தர தீர்வாக இருக்கும்.