/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகமாய் அமைந்தது சொந்த ஊர் பயணம்
/
சுகமாய் அமைந்தது சொந்த ஊர் பயணம்
ADDED : அக் 19, 2025 10:50 PM

திருப்பூர்: திருப்பூரில், ஒரே நாளில், ஒரே நேரத்தில் அனைத்து பயணிகளும் முண்டியடிக்காமல், சீராக பஸ் ஸ்டாண்ட் வந்ததால், சிறப்பு பஸ்களில், படிக்கட்டு தொங்கல் பயணம் தவிர்க்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ் இயக்கம், 16ம் தேதி இரவு முதல் துவங்கியது. இருப்பினும், திருப்பூரில் நேற்று இரவு 7:00 மணிக்கு பின் தான் சிறப்பு பஸ்களில் கூட்டம் மெல்ல அதிகரித்தது.
அடித்து பிடித்து பஸ் ஏற வேண்டிய நிலை ஏற்படவில்லை. இருக்கைகள் நிரம்பின; படிக்கட்டு, தொங்கல் பயணம் இல்லை.
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்ப கோணம் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் நேற்று காலையும் எதிர்பார்த்த கூட்டமில்லை; பயணிகளுக்காக பஸ்கள் காத்திருந்தன. வரிசையில் நின்று ஒவ்வொருவராக பஸ் ஏற போலீசார் அனுப்பி வைத்தனர்.
இரு தினங்களாக கூட் டம் இல்லாமல் காணப்பட்ட கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு கூட்டம் அதிகரித்தது.
மதுரை, தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் பஸ்களில் வரிசையில் காத்திருந்து பயணிகள் பஸ் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'கடந்தாண்டு வியாழக் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
செவ்வாய்க்கிழமை வரை கல்வி நிலையங்கள், நிறுவனங்கள் செயல்பட்டதால், ஒட்டுமொத்த கூட்டமும் செவ்வாய் இரவு, புதன் கிழமை பஸ் ஸ்டாண்ட் நோக்கி படையெடுத்தது.
நடப்பாண்டு பண்டிகைக்கு இரண்டு நாள் முன்பே விடுமுறை துவங்கியது. வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை காலை துவங்கி, இரவு வரை, நேற்று நாள் முழுதும் பயணிகள் சீராக பஸ் ஸ்டாண்ட் வந்து, சிறப்பு பஸ் ஏறிச் சென்றனர்.
ஒரே நாளில், ஒரே நேரத்தில் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேராததால், நெரிசல் தவிர்க்கப்பட்டது; சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணித்தனர்,' என்றனர்.