/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் பிரச்னைக்காக ஒன்றிய அலுவலகம் போராட்ட களமாகிறது!
/
குடிநீர் பிரச்னைக்காக ஒன்றிய அலுவலகம் போராட்ட களமாகிறது!
குடிநீர் பிரச்னைக்காக ஒன்றிய அலுவலகம் போராட்ட களமாகிறது!
குடிநீர் பிரச்னைக்காக ஒன்றிய அலுவலகம் போராட்ட களமாகிறது!
ADDED : மே 01, 2024 07:27 AM

உடுமலை; குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி, குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை, பல்வேறு ஊராட்சி மக்கள் முற்றுகையிட்டு போராட துவங்கியுள்ளனர்; கூட்டுக்குடிநீர் திட்ட வினியோக பிரச்னைக்கு, மாவட்ட நிர்வாகம் தீர்வு காணாவிட்டால், கோடை காலம், முழுவதும் போராட்டம் தொடரும் வாய்ப்புள்ளது.
குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ளன. கடும் வறட்சி காரணமாக, உள்ளூர் நீராதாரங்களான போர்வெல்கள் வற்றியுள்ள நிலையில், திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தையே, குடிநீருக்காக மக்கள் நம்பியுள்ளனர்.
சாலை மறியல்
கூட்டுக்குடிநீர் திட்டத்தில், கடைக்கோடி கிராமங்களுக்கு போதிய வினியோகம் இருப்பதில்லை என, கடந்த சில மாதங்களாக தொடர் புகார் எழுந்து வருகிறது.
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் சார்பில், ஒன்றிய நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார் மனு அனுப்பினர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று மூங்கில்தொழுவு கிராமத்தைச்சேர்ந்த மக்கள், குடிநீர் கேட்டு, குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய் மற்றும் வால்வுகளுக்கு நேரடியாக சென்று, மக்கள் ஆய்வு செய்தனர். வால்வு பகுதியில் இருந்த, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
அப்போது அவர்களிடம் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், திருப்தியடையாத மக்கள், சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, பெதப்பம்பட்டி நால்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையிலும், உடுமலை ரோட்டிலும் போக்குவரத்து பாதித்தது. குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இரு நாட்களில், மூங்கில்தொழுவு ஊராட்சிக்கு குடிநீர் வினியோகம் சீராக்கப்பபடும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து அக்கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு, திரும்பிச்சென்றனர்.
முற்றுகை போராட்டம்
மறியல் போராட்டம் முடிந்த பிறகு, சோமவாரப்பட்டி ஊராட்சித்தலைவர் விமலா மற்றும் அப்பகுதி மக்கள், குடிமங்கலம் ஒன்றிய அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'தங்கள் ஊராட்சிக்குட்பட்ட வினியோக குழாய்களை, பிற பகுதியைச்சேர்ந்தவர்கள் எப்படி ஆய்வு செய்தனர்; எங்கள் பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இத்தகைய செயல்களால், மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பாரபட்சம் இல்லாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும். 'கேட் வால்வ்' பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தடுப்பு மற்றும் பூட்டு போட குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால், மக்கள் திரும்பிச்சென்றனர். இரு ஊராட்சியைச்சேர்ந்த மக்களின் போராட்டத்தால், ஒன்றிய அலுவலகத்தில் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.
கவனிக்க வேண்டும்
குடிமங்கலம் ஒன்றியத்தின் பல ஊராட்சிகளில், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பு குழு அமைத்து, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இல்லாவிட்டால், மக்கள் போராட்டங்கள் கோடை காலம் முழுவதும் தொடரும் வாய்ப்புள்ளது.
திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், பிரதான குழாய் உடைப்பு சீரமைப்பு; ஊராட்சி வாரியாக வினியோகிக்கப்படும் குடிநீர் அளவு குறித்து, தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.