/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருத்தரங்கு வந்த பெண்கள் கால்கடுக்க நின்ற அவலம்
/
கருத்தரங்கு வந்த பெண்கள் கால்கடுக்க நின்ற அவலம்
ADDED : அக் 18, 2024 11:45 PM

திருப்பூர், : சமூக நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால், கூட்ட அரங்கிற்கு வெளியே பெண்கள் கால்கடுக்க நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண்களுக்கான கருத்தரங்கம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி தலைமை வகித்தார்.
குழந்தைகள் நலக்குழும தலைவர் ஆறுச்சாமி, உறுப்பினர் சரோஜா, வக்கீல்கள் திங்களவன், சங்கமித்ரா ஆகியோர், மகளிர் நலன், சமூக பாதுகாப்பு குறித்து பேசினர்.
இந்த கருத்தரங்கம் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகள் எந்த முன்னறிவிப்பும் செய்யவில்லை. ஆனாலும், தகவலறிந்து, ஆதரவற்ற பெண்கள் ஏராளமானோர் கருத்தரங்கிற்கு வந்துவிட்டனர். இதை அதிகாரிகள் எதிர்பார்க்க வில்லை. கூட்ட அரங்கம் நிறைந்தநிலையில், போதிய இருக்கை, இட வசதியின்றி, பெரும்பாலான பெண்கள், அரங்கு வெளியே கால்கடுக்க நின்றுகொண்டிருந்தனர்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் அதிகாரிகள், முறையாக அறிவிப்பு செய்யவேண்டும்; போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்பது, பெண்களின் கோரிக்கையாக உள்ளது.

