/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெக்கலுார் சந்தை இன்று முதல் செயல்படும்!
/
தெக்கலுார் சந்தை இன்று முதல் செயல்படும்!
ADDED : மே 24, 2025 11:20 PM

அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலுார் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வாரச்சந்தையில், 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 72 கடைகள் கடந்த பிப்., 17ம் தேதி திறக்கப்பட்டது.
சந்தையில் அடிப்படை வசதிகளான குடிநீர், கடைகளுக்கு மின் வசதியுடன் கூடிய விளக்குகள், தரைத்தளம் என எதுவும் அமைக்கப்படவில்லை. மழைக்காலங்களில் வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாத நிலையில் கடைகளின் முன்புறம் சேறும் சகதியுமாக காணப்பட்டது. வெள்ளம் சூழ்ந்தால், பொதுமக்கள் பொருட்கள் வாங்க சந்தைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படும். வியாபாரிகள் தெக்கலுார் சர்வீஸ் ரோட்டில் கடைகளை போட்டு பல மாதங்களாக வியாபாரம் செய்து வந்தனர்.
'குடி'மகன்கள் கூடாரம்
இதில், 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த ஏலதாரர் அடிப்படை வசதிகள் இல்லாமல் கடைகள் அமைக்கப்பட்டதால் வியாபாரிகளிடம் உரிய முறையில் சுங்கம் வசூலிக்க முடியவில்லை. சந்தை வளாகத்தைச் சுற்றிலும் முள் செடிகள், பார்த்தீனியம் ஆகியவை வளர்ந்து காடு போல காட்சியளித்தது. பல மாதங்களாக பயன்பாடு இல்லாமல் கிடக்கும் சந்தை கடைகளை மது அருந்துபவர்கள் தங்களின் கூடாரமாக மாற்றினர்.
சந்தை வளாகத்தைச் சுற்றிலும் மக்காத பாலிதீன் கவர்கள், தின்பண்ட கவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், மது பாட்டில்களை உடைத்து ஆங்காங்கே வீசிச் சென்றனர். இரவு நேரங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளதால் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதால், களைச்செடிகள், புதர்கள், குப்பைகள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டது.
தற்காலிகமாக இரும்பு பைப் நடப்பட்டு மூன்று இடங்களில் மின்சார லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் வாரச்சந்தையில் நிரந்தர கடை வியாபாரிகள் போக மீதமுள்ள வியாபாரிகளுக்காக சந்தையின் நடுவில் உள்ள பகுதியில் அளவீடு செய்து கடைகள் பிரிக்கும் பணிகள் நடைபெற்றது.