/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசியில் ஐராவதம் உருவாக்கிய தெப்பக்குளம்
/
அவிநாசியில் ஐராவதம் உருவாக்கிய தெப்பக்குளம்
ADDED : ஜன 18, 2024 12:32 AM

'அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய்' என்று திருநாவுக்கரசர் சிவபெருமானை பாடியிருக்கிறார். சிவனின் அக்னி தாண்டவத்தால், அகிலம் முழுவதும் ஆட்டம் கண்ட போதும், அவிநாசி என்ற திருத்தலம் நிலை பெற்றிருந்தது.
இதனாலேயே, தேவாதி தேவர்களும் அவிநாசிக்கு வந்து ஒளிந்து கொண்டனர். அதன்காரணமாகவே, இத்தலம் திருப்புக்கொளியூர் என்று அழைக்கப்படுகிறது. அழிவில்லா அருட்கடாட்ஷம் மிகுந்த அவிநாசி திருத்தலத்தில் உள்ள தீர்த்தங்களும் முக்கியமானவை. காசிக்கங்கை தீர்த்தம், தெப்பக்குளம், நாககன்னிகை தீர்த்தம், திருநள்ளாறு, தாமரைக்குளம், ஐராவதரத்துறை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.
சாபம் பெற்ற இந்திரனின் யானையான ஐராவதம், அவிநாசி வந்து தவம் இருந்தது; தனது தந்தத்தால் குளம் உருவாக்கி வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. அந்த குளமே, கருணாம்பிகை அம்மன் சன்னதியின் எதிரே உள்ள, நான்கு புறமும் கருங்கல் படிகள், நீராழி மண்டபத்துடன் காட்சியளிக்கும் தெப்பக்குளம்.
செல்லங்க சமுத்திரம், சந்திர புஷ்கரணி, அமராவதி தீர்த்தம் என்றொல்லாம் அழைக்கப்படும் இந்தகுளத்தில், தேர்த்திருவிழாவின் போது, தெப்போற்சவம் மின்னொளியில் நடத்தப்படும். அவிநாசியில் வாழ்ந்து வந்த குருநாதபண்டாரம் என்பவர், நீராழி மண்டபத்துடன் கூடிய தெப்பக்குளத்தில் நீராடி, தன்னிடம் இருந்த லிங்கத்துக்கு சிவபூஜை நடத்தி வந்தார்.
லிங்கத்தை மீட்டகுருநாத பண்டாரம்
அரசு அதிகாரிகள், தாமரைக்குளம் உடைப்பை சரிசெய்ய அழைத்தும் போகாததால், பூஜை செய்து வந்த சிறிய சிவலிங்கத்தை துாக்கி குளத்தில் எறிந்துவிட்டனர். லிங்கம் பறிபோனது குறித்து, குருநாதபண்டாரம், அவிநாசியப்பரிடம் கண்ணீருடன் முறையிட்டார்.
அன்றைய தினம், தெப்பக்குளத்தருகில் நின்றிருந்த போது, பெரிய மீன் ஒன்று, லிங்கத்தை கவ்விக்கொண்டு வந்து, தரையில் சேர்த்ததாக, தலபுராணம் கூறுகிறது. கோவிலின் சிவாலயத்தில் உள்ள காசிக்கிணறு, காசி தீர்த்தம் எனப்படுகிறது.
வெளிமண்டபத்தில், நாககன்னிகை தீர்த்தம் உள்ளது. தலா, 40 மீ., நீளம், 40 மீ., அகலம் என சதுர வடிவில் தெப்பக்குளம், நீராழி மண்டபத்துடன் இன்றும் கம்பீராக காட்சியளிக்கிறது.
திருப்பணியின் ஒன்றாக, குளத்தின் நான்கு புறமும் கம்பிதடுப்பு அமைத்து, பக்தர்கள் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
கடந்த மாதங்களில் மழை பெய்திருந்த நிலையில், திருப்பணி நடந்து வருவதால், இறைவனின் அருள் உள்ளம் பொங்குவது போல், தெப்பக்குளமும் தண்ணீரால் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. இதனால், கோவில் நிர்வாகம், குளத்துநீரை தினமும் மோட்டார் வைத்து இறைத்து வெளியேற்றி வருகிறது.
பசிப்பிணி போக்கியகஞ்சித் தொட்டி
அவிநாசி கோவில் பிரகாரத்தில், தென்புறம் மதில் அருகே, பெரிய கல்தொட்டி ஒன்று காட்சிக்கு இருந்துவந்தது. தற்போது, திருமாளிகை பத்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்த பெரிய கல் தொட்டி, தெப்பக்குளம் அருகே நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது.
பல உயிர்களுக்கு பசிப்பிணியாற்றிய கஞ்சித்தொட்டி, தாமரை, அல்லி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய குளம் போல் காட்சியளிக்கிறது. மொத்தம், 17 அடி நீளம், நான்கு அடி அகலத்துடன், 3.50 அடி உயரத்தில் அமர்ந்த, 20 டன் எடையுள்ள கல்தொட்டி, தெப்பக்குளத்துக்கு துணை குளமாக மாறியுள்ளது!
'ஆலயங்கள் அறம்காக்கும் நிலையங்கள்... பசிப்பிணி போக்கியது என் வயது அன்று... இன்று அப்பிணியில்லை. அதனால் என் வயிற்றில் புன்னகை பூக்கள்... ' என்று, காய்ந்து போயிருந்த கல்தொட்டியே, மகிழ்ச்சியுடன் பக்தர்களிடம் பேசுவது போன்ற வாசகத்தையும் பார்க்கலாம்.
- நமது நிருபர் -