/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம்
/
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம்
ADDED : ஜூலை 13, 2025 12:32 AM

திருப்பூர் : திருப்பூர், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஆனி தேர்த்திருவிழா, 10ம் தேதி கோலாகலமாக நடந்தது. அதனை தொடர்ந்து, அன்று இரவு, உற்சவமூர்த்திகள் வண்டித்தாரை பார்த்து, கோவிலுக்கு திரும்பினர். நேற்று முன்தினம், குதிரை வாகனத்தில் ஏறி, விஸ்வேஸ்வர சுவாமி பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று மாலை, தெப்ப உற்சவம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள சிறிய குளம் அலங்கரிக்கப்பட்டு, வாசனை திரவியங்கள் கலந்த தீர்த்தம் நிரப்பப்பட்டது. முன்னதாக, சோமஸ்கந்தருக்கு மகா அபிேஷகம் நடந்தது.
உற்சவமூர்த்திகள், பூதவாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர். இரவு, 7:00 மணிக்கு, உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, தெப்போற்சவத்தில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஸ்ரீநடராஜர் தரிசனகாட்சி இன்று நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீநடராஜப்பெருமான் - சிவகாமசுந்தரி அம்மன் மகா அபிேஷகமும், சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா காட்சி அருளும் நடைபெற உள்ளது; மாலை, 5:00 மணிக்கு நடராஜர் தரிசனம் நடக்கிறது.
நாளை மஞ்சள் நீர் விழாவும், 15ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, முருகேசன் தலைமையிலான அறங்காவலர் குழுவினரும், செயல் அலுவலர் அருள்செல்வன் தலைமையிலான கோவில் நிர்வாகமும் செய்திருந்தது.