/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மடத்துக்குளத்தில் பஸ் ஸ்டாண்ட்டுக்கு பேர் மட்டும் தான் இருக்கு! உள்ளே வராத பஸ்களால் வேதனை
/
மடத்துக்குளத்தில் பஸ் ஸ்டாண்ட்டுக்கு பேர் மட்டும் தான் இருக்கு! உள்ளே வராத பஸ்களால் வேதனை
மடத்துக்குளத்தில் பஸ் ஸ்டாண்ட்டுக்கு பேர் மட்டும் தான் இருக்கு! உள்ளே வராத பஸ்களால் வேதனை
மடத்துக்குளத்தில் பஸ் ஸ்டாண்ட்டுக்கு பேர் மட்டும் தான் இருக்கு! உள்ளே வராத பஸ்களால் வேதனை
ADDED : ஜூலை 27, 2025 09:23 PM

உடுமலை; மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் மப்ஸல் பஸ்கள் செல்லாமல், தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று பயணியரை ஏற்றிச்செல்வதால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது; மக்களும் பதட்டத்துடன் அப்பகுதியில் காத்திருக்க வேண்டி உள்ளது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமைந்துள்ளது. கடந்த, 1998ல், அப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது; 2017ல், 1.50 கோடி ரூபாய் செலவில், பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டது.
இவ்வாறு, பல கட்ட மாக பஸ் ஸ்டாண்ட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டாலும், மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காத நிலையே உள்ளது.
பழநி மற்றும் உடுமலையில் இருந்து இயக்கப்படும் சில டவுன்பஸ்களை தவிர, தேசிய நெடுஞ்சாலையில் வரும் எந்த பஸ்சும், பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று திரும்புவதில்லை.
தேசிய நெடுஞ்சாலையில், பழநி நோக்கி செல்லும் பஸ்சும், உடுமலை நோக்கி செல்லும் பஸ்சும், பஸ் ஸ்டாண்ட்டுக்கு வெளியே நெடுஞ்சாலையில், ஒரே இடத்தில் நிறுத்தப்படுகின்றன.
இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிக வாகன போக்குவரத்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, பயணியர் அவதிப்படுவதோடு, விபத்துக்களும் ஏற்படுகிறது.
உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் சேர்ந்த கடந்தாண்டு, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் வர நடவடிக்கை எடுத்தனர்.
சில வாரங்கள் இந்நிலை தொடர்ந்தது. பின்னர் வழக்கம் போல, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் வருவதில்லை. அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட்டுக்குள் வராததால், பயணியர், குழப்பமடைந்து, பஸ் ஸ்டாண்ட்டுக்கு வெளியிலேயே காத்திருக்கின்றனர்.
இதனால், நடமாட்டம் இல்லாமல், பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடுகிறது. இருக்கை உள்ளிட்ட வசதிகளும் பயன்படுத்தப்படாமல், வீணாகி வருகிறது. இரவு நேரங்களில், 'குடி'மகன்கள் அங்கு தஞ்சமடைகின்றனர்.
இடவசதி உள்ளது அப்பகுதி மக்கள் கூறியதாவது: மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், பஸ்கள் திரும்ப போதிய இடவசதி உள்ளது. ஆனால் நெடுஞ் சாலையில், பஸ்கள் நின்று செல்லும் போது, அவசரமும், பதட்டமும் ஏற்படுகிறது.
அருகிலுள்ள நகரங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் மட்டுமாவது பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து திரும்பலாம். விதிமுறைப்படி, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.
வேகமாக வளர்ந்து வரும் மடத்துக்குளம் பகுதியின் அடையாளமாக உள்ள, பஸ் ஸ்டாண்ட் பொலிவிழந்து காட்சிப்பொருளாகி வருகிறது.
வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழுவினர், மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாத பஸ்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும், பஸ்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள், சென்று திரும்பி வரும் வகையில், அப்பகுதியிலுள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளையும் அகற்ற, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.