/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுால் விலை மாற்றம் இல்லை; ஜவுளி உற்பத்தியில் சிக்கல் இல்லை
/
நுால் விலை மாற்றம் இல்லை; ஜவுளி உற்பத்தியில் சிக்கல் இல்லை
நுால் விலை மாற்றம் இல்லை; ஜவுளி உற்பத்தியில் சிக்கல் இல்லை
நுால் விலை மாற்றம் இல்லை; ஜவுளி உற்பத்தியில் சிக்கல் இல்லை
ADDED : அக் 03, 2024 05:39 AM
திருப்பூர், : ன்பது மாதங்களை தொடர்ந்து, இம்மாதமும் நுால் விலையில் மாற்றம் இல்லாததால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பருத்தி ஆண்டு நிறைவு பெற்ற பின்னரும், இருப்பு வைத்திருந்த பருத்தி வரத்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விரைவில், அறுவடை துவங்குவதால், புதிய பருத்தி சீசனுக்கான பஞ்சு வரத்தும் துவங்க இருக்கிறது.
கடந்த பருத்தி ஆண்டில் (2023 அக்., - 2024 செப்.,), 320 லட்சம் பேல் (ஒரு பேல் என்பது 170 கிலோ) அளவுக்கு, பஞ்சு அறுவடை நடக்குமென கணக்கிட்டிருந்தனர்; மாறாக, 322 லட்சம் பேல் விற்பனைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக, பஞ்சு விலை மாற்றமின்றி தொடர்ந்தது.
அதாவது, ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, 55 ஆயிரம் ரூபாயில் இருந்து, 59 ஆயிரம் வரையில் விற்கப்படுகிறது. இதன்காரணமாக, நுால்விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. கடந்த ஜன., மாதம் துவங்கி, ஒன்பது மாதங்களாக, நுால்விலையில் சிறிய மாற்றங்கூட ஏற்படவில்லை.
வழக்கமாக, பருத்தி ஆண்டு முடிவடையும் போது, பஞ்சு விலை உயரும்; புதிய பஞ்சு வரத்து துவங்கியதும், விலை குறையும். பருத்தி ஆண்டு முடிந்த பின்னரும், பஞ்சு வரத்து குறையாததால், இந்தாண்டும் பஞ்சு விலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லையென, நுாற்பாலைகள் நம்புகின்றன.
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பனியன் ஆடை உற்பத்தியில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், நுால் விலையில் மாற்றமில்லை. நுால் விலை, நிலையாக இருக்கும் பட்சத்தில், ஜவுளி உற்பத்தியில் எவ்வித சிக்கலும் ஏற்பட வாய்ப்பிருக்காது என்று, பின்னலாடை தொழில்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
'டாஸ்மா' தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''பருத்தி சீசன் முடிந்த பின்னரும், இருப்பு வைத்திருந்த பஞ்சு விற்பனைக்கு வருவது குறையவில்லை. இந்த வார நிலவரப்படி, 25 ஆயிரம் பேல் வரை, தினமும் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.
பஞ்சு விலையும் சீராக இருக்கிறது. நுால் விற்பனை அதிகரிக்கும் போது, தேவைகள் அதிகரித்து தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், நுால் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது,'' என்றார்.

