/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமாங்கல்ய நோன்பு; பெண்கள் பக்தி பரவசம்
/
திருமாங்கல்ய நோன்பு; பெண்கள் பக்தி பரவசம்
ADDED : ஜன 03, 2026 06:08 AM

திருப்பூர்: திருமாங்கல்ய நோன்பு நாளான நேற்று, முழுமதி தோன்றிய திருவாதிரை நட்சத்திர நேரத்தில், பெண்கள், திருவாதிரை களி படைத்து வழிபட்டனர்; தாலி சரடு மாற்றி ஆசி பெற்றனர்.
'மாதங்களில் நான் மார்கழி' என்று கிருஷ்ணபரமாத்மா கூறியிருக்கிறார். அவ்வகையில், மார்கழி மாதத்தின், ஒவ்வொரு நாளையும் ஹிந்துக்கள் பக்தி நெறியுடன் கொண்டாடுகின்றனர்.
அதிகாலையில், பஜனை பாடி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
வைகுண்ட ஏகாதசி நாளில், விஷ்ணு கோவில்களில் பரமபத வாசல் திறந்து, பக்தர்கள் வழிபடுகின்றனர். அதனை தொடர்ந்து, சுமங்கலி நோன்பும், ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கும். அதன் தொடர்ச்சியாக, மார்கழி 27ம் நாள் கூடாரை வெல்லும் சீர் உற்சவம், பெருமாள் கோவில்களில் நடக்கும்.
கடந்த 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று சுமங்கலி நோன்பு கொண்டாடப்பட்டது. வீடுகளில் கண்ணாடி, சீப்பு, ஏணி, சூரியன், சந்திரன், மைகோதி ஆகியவற்றை கோலமாக வரைந்து, மஞ்சள் அல்லது சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து அலங்கரித்தனர்.
தட்டில், புதிய தாலிச்சரடு, கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம், பூ வகைகளை வைத்தனர். பகலில் விரதம் இருந்த பெண்கள், தலைவாழை இலையில் படையல் வைத்து, திருவாதிரை களி படைத்து, சுவாமியைவழிபட்டனர்.
புதிய தாலி சரடை பெண்கள் அணிந்து, சந்தனம், குங்குமம் வைத்து, பூக்களை சூடிக்கொண்டு, பெரியவர்களிடம் ஆசி பெற்றனர்.
நேற்று வீட்டில் திருமாங்கல்ய நோன்பு கொண்டாடியவர்கள், இன்று தம்பதி சமேதராக சிவாலயம் சென்று, ஆருத்ரா தரிசனத்தில் ஸ்ரீநடராஜர் - சிவகாமியம்மனை வழிபட்டு, விரதத்தை பூர்த்தி செய்யலாம் என, சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

