'ஷராரா' மவுசு கூடுது யுவராஜ், உரிமையாளர்,
ஜான்வி அய்கா ஆடையகம், திருப்பூர்.
தீபாவளி பண்டிகைக்கு இளம் தலைமுறையினரின் விருப்பம், ஆண்டுக்காண்டு மாறுபடுகிறது. புதிய ரகம், புதிய டிசைன்களில் ஆடை வாங்குவதில் விருப்பம் காட்டுகின்றனர். பொதுவாக, சுடிதார், லெகாங்கா, அனார்கலி போன்ற ஆடைகளை அதிகம் வாங்கி வந்த பெண்கள், இம்முறை ஷராரா, சோளி, காக்கரா சோளி போன்ற ஆடை ரகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியிருக்கின்றனர். இத்தகைய ஆடை தயாரிப்புகளில் இந்திய மற்றும் வட மாநிலத்தவரின் கலாசாரம் கலந்திருக்கிறது. இத்தகைய பேன்ஸி ரக ஆடைகளை, 12 வயது முதல், 30 வயது வரையுள்ளவர்கள் விரும்பி வாங்குகின்றனர். ஆடை தேர்வு செய்யும் பெண்கள், அவற்றின் தரம் மற்றும் டிசைன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
எண்ணற்ற ரகங்கள் கல்பனா தங்கராஜ், நிர்வாகி,
வஸ்த்ரா நிறுவனம், திருப்பூர்.
ஆடை சில்லரை வர்த்தகத்தை பொறுத்தவரை, ஜி.எஸ்.டி., 5 சதவீதம் என்பதில் எந்த மாற்றமும் இல்லாததால், ஜி.எஸ்.டி., குறைப்பின் தாக்கம் எதுவும் இல்லை. ஆடை நுகர்வை பொறுத்தவரை, நுகர்வோரின் விருப்பம், எதிர்பார்ப்பு மாறிக் கொண்டே இருக்கிறது. ஆடி பண்டிகைக்கும், தீபாவளிக்கும் இடையிலான நுகர்வோரின் விருப்பத்தில் கூட, எண்ணற்ற மாற்றங்களை பார்க்க முடிகிறது. அதற்கேற்ப, ஏகப்பட்ட ரகங்களில் பேன்ஸி புடவைகள் சந்தைக்கு வந்துள்ளன. பெரும்பாலான மக்கள், தங்களின் பட்ஜெட்க்குள் அதிக எண்ணிக்கையில் சேலை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நுகர்வில் ஈடுபடுகின்றனர். பேன்ஸி ரக புடவை வாங்குவதில் நுகர்வோர் காண்பிக்கும் அதே ஆர்வம், காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை மீதும் இருக்கிறது. எந்த வகை ஆடை வாங்கினாலும், அது, தனித்துவத்துடன் தங்களை வெளிக்காட்ட வேண்டும் என விரும்புகின்றனர்.
இரட்டிப்பு பலன் தளபதி, நிர்வாக பங்குதாரர்,
தளபதி எண்டர்பிரைசஸ், அவிநாசி
ஆயுதபூஜைக்கு பின், மக்களின் நுகர்வு அதிகரித்திருக்கிறது. ஜி.எஸ்.டி., குறைப்பால் எல்.இ.டி., டிவி., மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவற்றின் விலை குறைந்திருக்கிறது. இதனால், அதிகம் பேர் அத்தகைய பொருட்களை வாங்குகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி கார்த்திகை, ஐப்பசியில் முகூர்த்த நாட்கள் வருவதால், சீர்வரிசை வழங்குவதற்கு, வீட்டுக்கு தேவையான பர்னிச்சர் பொருட்களை மக்கள் அதிகம் வாங்குகின்றனர். தீபாவளியை முன்னிட்டு வழங்கப்படும் 'காம்போ ஆபர்' மற்றும் தள்ளுபடி சலுகையை பயன்படுத்தி, சீர்வரிசை பொருட்களையும் வாங்குகின்றனர்; இது, அவர்களுக்கு இரட்டிப்பு பலன் கொடுக்கிறது.
வாண வேடிக்கை பலவிதம் வெங்கடேசன், தாமோதரன்,
உரிமையாளர்கள், வாசவி பட்டாசு கடை, திருப்பூர்
இம்முறை தீபாவளிக்கு, குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அனுமார் கதா என்ற பெயரில் புஸ்வாணம் சந்தைக்கு வந்துள்ளது. அதே போன்று, முதலில் புகையை வெளியேற்றி பின், வெடிக்கும் வகையிலான சிலிண்டர் பாம், மக்களை ஈர்க்கிறது. மேலே உயரமாக சென்று பல்வேறு வண்ண சிதறல்களுடன் வெடிக்கும் பட்டாசுகளுக்கு, மவுசு அதிகரித்து வருகிறது.
பொதுவாக, மின்கம்பிகள் உள்ள உயரம் வரை தான் சென்று வெடிக்கும்; இம்முறை அதற்கும் உயரமாக சென்று வாண வேடிக்கை நிகழ்த்தும் வகையிலான வெடிகள் வந்துள்ளன. பொதுவாக, கோவில் விழாக்கள் உள்ளிட்ட பெரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் வெடிகளை, அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வெடிக்க துவங்கியிருக்கின்றனர்.
அதற்கேற்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வெடிகள், விற்பனைக்கு வந்துள்ளன. பட்டாசு விலையை பொறுத்தவரை கடந்தாண்டை ஒப்பிடுகையில் எந்தவொரு மாற்றமும் இல்லை; மக்களின் நுகர்வை பொறுத்தவரை, மக்களின் பட்ஜெட் நிலையானது; அதற்கேற்ப, வியாபாரிகள் தங்களின் லாபத்தை குறைத்து, வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துகின்றனர்.