/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இப்படி தான் இருக்கணும் மண் பரிசோதனை!
/
இப்படி தான் இருக்கணும் மண் பரிசோதனை!
ADDED : ஜூன் 07, 2025 11:28 PM
'விவசாயிகள், மண் பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட உரத்தை இட வேண்டும்' என, வேளாண் துறை வலியுறுத்தி வருகிறது. மண் பரிசோதனைக்கு மாதிரி சேகரிக்கும் முறையை தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ளது.
ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் இருந்து, குறுக்கும் நெடுக்குமாக மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்கும் இடத்தில் உள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை, மண்ணை நீக்காமல், கையால் அப்புறப்படுத்த வேண்டும். 'வி' வடிவத்தில் குழி வெட்டி, அதன் இரு பக்கங்களிலும் மேலிருந்து கீழாக மண்ணைச் செதுக்கி எடுத்துச் சேகரிக்க வேண்டும்.
நெல், நிலக்கடலை, சிறுதானியப் பயிர்கள் பயிரிடும் நிலத்தில், 15 செ.மீ., ஆழத்துக்கும், பருத்தி, கரும்பு, வாழை, காய்கறிகள் பயிரிடும் நிலத்தில் 22 செ.மீ., ஆழத்துக்கும், தென்னை, மா, மற்றும் பழத்தோட்ட பயிர்களுக்கு 30 செ.மீ., 60 செ.மீ., 90 செ.மீ., என மூன்று மாதிரிகளும் எடுக்க வேண்டும்.
மர நிழல், வரப்பு வயலோரம், நீர் தேங்கிய பகுதி, எரு மற்றும் உரம் கொட்டி பகுதி, உரம் போட்ட உடனே மண் மாதிரிகளைச் சேகரிக்கக் கூடாது. இந்த மண்ணை நன்றாகக் கலந்து, கால் பங்கீட்டு முறையில், சம பங்காக நான்காக பிரிக்கவும். நான்கு தனித்தனி கூறுகளாகப் பிரித்து, எதிரெதிரே உள்ள இரு பங்குகளை கழித்து விடவும். மீதமுள்ள இரு பங்குகளை ஒன்றாக சேர்த்து கலக்கி, மீண்டும் நான்கு பங்காகப் பிரிக்கவும்.
இப்படி தொடர்ந்து அரை கிலோ வரும் வரை பங்கீடு செய்யவும். இந்த மண் மாதிரியை, வேளாண் பல்கலை உள்ளிட்ட பகுதிகளில் கொடுத்த மண் பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் உர மேலாண்மை செய்தால், நல்ல மகசூல் பெறலாம். மண் வளமும் கெடாது.
இவ்வாறு, தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.