/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நின்ற லாரி மீது கார் மோதல் சகோதரிகள் உட்பட 3 பேர் பலி
/
நின்ற லாரி மீது கார் மோதல் சகோதரிகள் உட்பட 3 பேர் பலி
நின்ற லாரி மீது கார் மோதல் சகோதரிகள் உட்பட 3 பேர் பலி
நின்ற லாரி மீது கார் மோதல் சகோதரிகள் உட்பட 3 பேர் பலி
ADDED : அக் 26, 2024 08:48 PM

அவிநாசி:திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த பழங்கரை கிராமத்தில், ஆறு வழி நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 'எம்-சாண்ட்' ஏற்றி வந்த லாரி எரிபொருள் தீர்ந்ததால், இடது ஓரம் நிறுத்தப்பட்டிருந்தது.
நள்ளிரவு, 12:30 மணிஅளவில், பெங்களூரில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் ஒன்று, லாரியின் பின்பக்கம் மோதியதில், காரில் பயணித்த இரு பெண்கள் உட்பட மூவர் அதே இடத்தில் பலியாகினர்.
அவிநாசி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர்கள் கோவை, மருதமலை ரோடு, ஐ.ஓ.பி., காலனியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் மகள்கள் அபர்ணா, 26, ஹேமா, 21, கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த பேப்பர் கிடங்கு உரிமையாளர் அண்ணாதுரை மகன் மோனிஷ் பாபு, 28, என்பது தெரிந்தது.
கார் அப்பளம் போல நொறுங்கியதில், மூவரின் உடலை போராடி அவிநாசி தீயணைப்பு துறையினர் மீட்டனர். விபத்தில் இறந்த பெண்களின் தாய் மகாலட்சுமி அவிநாசியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முதல்வராக பணிபுரிந்து வருகிறார்.
போலீசார் கூறுகையில், 'சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் ஐ.ஐ.எம்.,மில் எம்.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வரும் அபர்ணா, தீபாவளி கொண்டாட, கோவை வருவதற்கு பெங்களூரு வரை விமானத்தில் வந்துள்ளார்.
அவரை கோவைக்கு அழைத்துச் செல்ல, அவரது தங்கையான, கோவை தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஹேமா மற்றும் குடும்ப நண்பரான மோனிஷ்பாபு ஆகிய இருவரும் பெங்களூரு சென்றுள்ளனர்.
'விமான நிலையத்தில் இருந்து அபர்ணாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர். காரை மோனிஷ்பாபு ஓட்டியுள்ளார். விபத்துக்கு காரணம் அதிவேகமா, துாங்கியதால் ஏற்பட்டதா என, தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.