/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒட்டுப்போட்டே காலம் ஓடுது! மங்கலம் ரோடு கலங்குது
/
ஒட்டுப்போட்டே காலம் ஓடுது! மங்கலம் ரோடு கலங்குது
ADDED : பிப் 14, 2024 11:37 PM
திருப்பூர் : மங்கலம் ரோடு பகுதியில், பல ஆண்டுகளாக ஒட்டுப்போடும் வேலை நடந்துவருவதால், புதிய தார்ரோடு அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூரில் இருந்து, மங்கலம் செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோடு, பல இடங்களில் படுமோசமாக இருக்கிறது. குறிப்பாக, சின்னாண்டிபாளையம் பிரிவு பகுதி, குளத்துக்கடை பஸ் ஸ்டாப் முதல் குளத்துக்கடை பஸ் ஸ்டாப், அங்கிருந்து சேனா பள்ளம் வரையில், ரோடு மிக மோசமாக இருக்கிறது.
மாநகராட்சி பணிக்காக, ரோடு பலமுறை தோண்டப்பட்டது. ஒவ்வொரு முறையும், 'பேட்ஜ் ஒர்க்' மட்டும் செய்யப்பட்டது. சின்னாண்டிபாளையம் முதல், குளத்துக்கடை வரையிலும், கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப் முதல் குளத்துக்கடை வளைவு வரையில், படுமோசமாக இருந்ததால், புதிய தார்ரோடு அமைக்கப்பட்டது. குடிநீர் குழாய் உடைப்பால், அப்பகுதியிலும் சேதமாகிவிட்டது.
நெடுஞ்சாலைத்துறை, மங்கலம் ரோடு பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; தொடர்ச்சியாக, 'பேட்ஜ் ஒர்க்' மட்டுமே செய்து கொண்டிருக்காமல், புதிய தார்ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு, மங்கலம் ரோட்டின் சில பகுதிகள், படுமோசமாக இருக்கின்றன. தொடர்ந்து, பல ஆண்டுகளாக 'பேட்ஜ் ஒர்க்' மட்டும் நடக்கிறது.
தெருவிளக்கு இல்லாத பகுதிகளில், 'டூ வீலரில்' செல்வதே பெரும் சவாலாக இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை மூலம், மிகவும் பழுதான இடங்களில் புதிய தார்ரோடு அமைக்க, மாவட்ட சாலைப்பாதுகாப்பு குழு உத்தரவிட வேண்டும்,' என்றனர்.

