/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வருமான வரி 'ரிட்டன்' தவறுகள் சரிசெய்ய காலவரம்பு நான்கு ஆண்டுகளாக நீட்டிப்பு
/
வருமான வரி 'ரிட்டன்' தவறுகள் சரிசெய்ய காலவரம்பு நான்கு ஆண்டுகளாக நீட்டிப்பு
வருமான வரி 'ரிட்டன்' தவறுகள் சரிசெய்ய காலவரம்பு நான்கு ஆண்டுகளாக நீட்டிப்பு
வருமான வரி 'ரிட்டன்' தவறுகள் சரிசெய்ய காலவரம்பு நான்கு ஆண்டுகளாக நீட்டிப்பு
ADDED : பிப் 02, 2025 01:04 AM
திருப்பூர்: வருமான வரி செலுத்துவோர், தாங்களாக முன்வந்து, வருமான வரி ரிட்டனில் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்யும் காலவரம்பு, நான்கு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக, இந்திய பட்டயக்கணக்காளர்கள் நிறுவனத்தின், திருப்பூர் கிளை தலைவர் ஆடிட்டர் செந்தில் குமார் தெரிவித்தார்.
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு உதவி, ஏற்றுமதி முன்னேற்றம், தொழில் முனைவோருக்கான வளர்ச்சி, நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை என, முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. கடன் உத்தரவாத திட்டத்தில், ஐந்து கோடியாக இருந்த உச்சவரம்பு, 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
'ஸ்டார்ட் அப்'களுக்கான கடன், 10 கோடியாக இருந்தது, 20 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கடன் திட்டத்திலும், உச்சவரம்பு 20 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எம்.எஸ்.எம்.இ., வகைப்படுத்தப்பட்ட முதலீட்டு உச்சவரம்பு, 2.5 மடங்கும், விற்பனை மீதான உச்சவரம்பு, 2 மடங்கும் உயர்ந்துள்ளது.
வருமான வரிச்சலுகை
வருமான வரி கட்டமைப்பில், ஏழு லட்சம் ரூபாய் வரையிலான வருவாய் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும், வருமான வரி கழிவு, 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்களுக்கு, ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கும். வருமானவரி விகிதங்களில் செய்யப்படும் மாறுதலால், ஆண்டு வருமானம் 24 லட்சம் ரூபாய் ஈட்டும் தனிநபர், 1.20 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்துவதை சேமிக்க முடியும். டி.டி.எஸ்., சட்டத்தை பொறுத்தவரை, மாத வாடகை வருமானம், 50 ஆயிரம் ரூபாய் வரை பெறுவோருக்கு, டி.டி.எஸ்., பிடித்தம் இருக்காது.
வருமான வரி அபராதம் இருக்காது
வங்கி வட்டி பெறும் மூத்த குடிமக்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை வரிபிடித்தம் இருக்காது. பொருள் விற்பனை மீதான, டி.சி.எஸ்., முழுவதும் நீக்கப்பட்டுள்ளது. வருமான வரி 'ரிட்டன்' தாக்கல் செய்யாததால் விதிக்கப்பட்ட கூடுதல் வரிப்பிடித்த சட்டமும் நீக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோர், தாங்களாக முன்வந்து, வருமான வரி 'ரிட்டனில்' ஏற்பட்ட தவறுகள் மற்றும் விடுதல்களை சரி செய்வதற்கான காலவரம்பு, இரண்டு ஆண்டுகளாக இருந்தது, தற்போது நான்கு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, வருமானவரி அபராதத்தில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. புதிய வருமான வரிச்சட்டம், தற்போதைய சட்டத்துக்கு மாற்றாக இருக்கும்.
வணிக வளர்ச்சி, எம்.எஸ்.எம்.இ., முதலீடு, ஏற்றுமதி, நடுத்தர மக்களுக்கான வரிச்சலுகை போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்படும் பல்வகை திட்டங்கள், இந்தியாவை ஆற்றல் மிகுந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்றும். புதிய வரி கட்டமைப்பு, நடுத்தர மக்களுக்கு அதிக நன்மையை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.