/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் முன்மாதிரி: மத்திய அமைச்சர் புகழாரம்
/
பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் முன்மாதிரி: மத்திய அமைச்சர் புகழாரம்
பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் முன்மாதிரி: மத்திய அமைச்சர் புகழாரம்
பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் முன்மாதிரி: மத்திய அமைச்சர் புகழாரம்
ADDED : ஜூலை 01, 2025 12:15 PM

திருப்பூர்:
''நம் நாட்டின் பின்னலாடை மொத்த ஏற்றுமதியில், 60 சதவீத பங்களிப்புடன், திருப்பூர் ஏற்றுமதி கேந்திரம், முன்மாதிரியாக திகழ்கிறது,'' என, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்க்கெரிட்டா பேசினார்.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சி குறித்த கலந்தாய்வு கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நேற்று நடந்தது. பல்வேறு தொழில் அமைப்பினருடன், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்க்கெரிட்டா கலந்துரையாடினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட தொழில் அமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பின், அமைச்சர் பபித்ரா மார்க்கெரிட்டா பேசியதாவது:
நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், 60 சதவீத பங்களிப்புடன், திருப்பூர் ஏற்றுமதி கேந்திரம் முன்மாதிரியாக திகழ்கிறது; மற்ற தொழில்துறையினருக்கு முன்னோடி நகரமாகவும் உயர்ந்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் வெற்றிப்பயணம், ஒட்டுமொத்த ஜவுளித்துறைக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (டப்) திட்டம், வட்டி மானிய திட்டம், புலம்பெயர் தொழிலாளர் தங்குமிட வசதி உள்ளிட்ட கோரிக்கைகள், பிரதமர் மற்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
வரும், 2030ல், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 100 பில்லியன் டாலர் (8.50 லட்சம் கோடி ரூபாய்) என்ற இலக்கை எட்ட, திருப்பூரின் பங்களிப்பு மிக அவசியம். இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தின் மையமாக திருப்பூர் திகழ்கிறது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளருக்கு உதவிட என்றும் துணை நிற்பேன். பிரிட்டன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் அமைய உள்ள வர்த்தக ஒப்பந்தத்தால், எதிர்காலத்தில் வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கும். அதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்க, மத்திய அரசின் உதவிகள் கிடைக்க பரிந்துரைக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.