/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு. ரூ.3.15 கோடி அபராதம்! மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதிரடி; திடக்கழிவு சரிவர கையாளாத பிரச்னை
/
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு. ரூ.3.15 கோடி அபராதம்! மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதிரடி; திடக்கழிவு சரிவர கையாளாத பிரச்னை
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு. ரூ.3.15 கோடி அபராதம்! மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதிரடி; திடக்கழிவு சரிவர கையாளாத பிரச்னை
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு. ரூ.3.15 கோடி அபராதம்! மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதிரடி; திடக்கழிவு சரிவர கையாளாத பிரச்னை
ADDED : ஜூலை 24, 2025 11:40 PM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சரிவர பின்பற்றாததை உறுதிசெய்துள்ள மாசுக்கட்டுப்பாடு வாரியம், 3.15 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், தினமும், 710 டன் குப்பை சேகரிக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் கணக்கு சொல்கிறது. குப்பை கொட்ட பிரத்யேக இடமில்லாததால், பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழியில் குப்பை கொட்டப்படுகிறது. 'இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது; நிலத்தடி நீர் மாசுபடுகிறது' என, அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.
'திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணி முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கு எதிராக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு பிரிவு மாநில செயலாளர் சதீஷ்குமார், 2024 நவ., மாதம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.
அதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், 'திருப்பூர் மாநகராட்சியில் தினசரி மேற்கொள்ளப்படும் குப்பை மேலாண்மை பணி குறித்து விளக்கமளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. ஆனால், விளக்கம் தராமல் மாநகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த, 16ம் தேதி வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில், 'கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர், திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை பணி குறித்த விளக்கமளிக்க வேண்டும். அதேநேரம், குப்பை கொட்டுவதில் இடமில்லாத சவாலை எதிர்கொண்டுள்ளதாக, சென்னை ஐகோர்ட்டில் மாநகராட்சி நிர்வாகம் மனு செய்துள்ளது. எனவே, மாநகராட்சியில் தினசரி சேகரமாகும் குப்பை, எந்த வகையில் மேலாண்மை செய்யப்படுகிறது; அகற்றப்படுகிறது என்பது குறித்த விளக்கத்தை, அடுத்த மாதம், 25ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்' என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், திடக்கழிவு மேலாண்மையில், எவ்வித முன்னேற்றமும் தென்படாத நிலையில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியை பின்பற்றாதது; சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக, 3.15 கோடி ரூபாயை இடைக்கால அபராதமாக செலுத்த வேண்டும்,' எனக்கூறி, கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் துாய்மைப்பணி ஒப்பந்ததாரர் (சீனிவாஸ் கழிவு மேலாண்மை நிறுவனம்) ஆகியோருக்கு, திருப்பூர் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.
கட்டாயமாக்க வேண்டும் திருப்பூர் மாநகராட்சியில், தினமும், 710 டன் குப்பை சேகரிக்கப்படுவதாக கூறுகின்றனர். இதில், 150 டன் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, உரமாக மாற்றப்படுகிறது. 200 டன் குப்பையில் இருந்து 'பயோ காஸ்' எடுக்கும் திட்டம் இருப்பதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஞ்சிய, 360 டன் குப்பையை அகற்றுவதற்கான வழி என்ன என்பது, கேள்விக்குறி. மாநகராட்சி நிர்வாகம், மக்களிடம் இருந்து குப்பை வரி வசூலிக்கிறது.
ஆனால், குப்பையை அகற்றும் பணி முறையாக நடப்பதில்லை. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பையை தரம் பிரித்து வழங்காத மக்களுக்கு அபராதம் விதிப்பது, மாநகரில் உள்ள தொழில் நிறுவனங்கள், அமைப்பினரை அழைத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவது உள்ளிட்ட எந்தவொரு பணிகளும் நடக்கவில்லை.
- சதீஷ்குமார்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்டப்பிரிவு மாநில செயலாளர்