/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெறிச்சோடிய திருப்பூர்! தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள், தொடர் மழையால் உள்ளூர்வாசிகளும் சுணக்கம்
/
வெறிச்சோடிய திருப்பூர்! தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள், தொடர் மழையால் உள்ளூர்வாசிகளும் சுணக்கம்
வெறிச்சோடிய திருப்பூர்! தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள், தொடர் மழையால் உள்ளூர்வாசிகளும் சுணக்கம்
வெறிச்சோடிய திருப்பூர்! தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள், தொடர் மழையால் உள்ளூர்வாசிகளும் சுணக்கம்
ADDED : அக் 21, 2025 10:55 PM

திருப்பூர்: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை மற்றும் தொடர் மழை காரணமாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருப்பூர் நகரின் அனைத்து முக்கிய ரோடுகளும் வெறிச்சோடியது.
திருப்பூரில், பனியன் உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்கள் என மாநகராட்சி பகுதி மக்கள் தொகை மட்டும் 14 லட்சம். இது தவிர கல்வி, மருத்துவம், தொழில், வேலை, வியபாரம் போன்ற காரணங்களுக்காக தினமும், 3 லட்சம் பேருக்கு மேல் வந்து செல்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், கோவை, ஈரோடு உள்ளிட்ட அருகாமை மாவட்டங்கள், பல்வேறு தென்மாவட்டங்களைச் சேர்ந்தோர் வசிக்கின்றனர். இது தவிர பல்வேறு வட மாநிலங்களிலிருந்தும் வந்த பல்லாயிரம் பேர் தங்கி, பனியன், விசைத்தறி உட்பட பல்வேறு தொழில்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
பல்வேறு நிறுவனங்களுக்கான சரக்கு வாகனங்கள், பஸ், மினி பஸ் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள், கார், பைக் போன்ற சொந்த வாகனங்கள் என திருப்பூர் நகர வீதிகளில் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்ற வண்ணம் இருக்கும். அவ்வகையில் பரபரப்பும், கடும் போக்குவரத்து நெரிசலும் சகஜமாக காணப்படும்.
நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாடப்பட்டதால், பண்டிகைக்கான பொருட்கள் வாங்கவும், பண்டிகை கொண்டாட சொந்த ஊர் பயணிக்கவும் மக்கள் வெள்ளத்தால் நகரம் முழுவதும் பரபரப்பாக இருந்தது. தீபாவளி நாளன்று, குறைந்தளவு மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.
தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைக்கு தான் நீண்ட நாள் விடுமுறை கிடைக்கும். இதனால், இங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வர். அங்கு தங்கள் உறவினர்களுடன் பண்டிகை கொண்டாடுவர். நடப்பாண்டு பனியன் நிறுவனங்கள் தீபாவளிக்கு, 10 நாள் விடுமுறை விட்டுள்ளன.
மேலும், தமிழக அரசும் கூடுதலாக நேற்று ஒரு நாள் விடுமுறை அறிவித்திருந்தது. இதனால், நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாக அமைந்ததால், பள்ளி, கல்லுாரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. நகரின் முக்கிய ரோடுகள் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டன. சினிமா தியேட்டர் மற்றும் பார்க் ஆகிய இடங்களில் சற்று மக்கள் கூட்டம் காணப்பட்டது.
'காற்று' வாங்கிய காய்கறி மார்க்கெட் வடக்கு, தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில், கடந்த ஒரு வாரமாக தீபாவளியை முன்னிட்டுவிற்பனை பரபரப்பாக இருந்தது.
ஆனால், கடந்த இரு நாட்களாக இவற்றில் விற்பனை மிகவும் குறைந்திருந்தது. வாடிக்கையாளர்கள் வருகையின்றி சந்தையில் உள்ள கடைகள் மற்றும் கமிஷன் மண்டிகள் வெறிச்சோடியது. திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைக்காரர்கள், தள்ளு வண்டி, பிளாட்பார கடை வியாபாரிகள் மொத்த விற்பனை கடைகள் மற்றும் தினசரி சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்வர். பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.தொடர் மழையும் இருந்ததால், வழக்கமாக நடைபெறும் வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவைக் காட்டிலும் குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் கடை வீதி மற்றும் பெரும்பாலான வீதிகள் மற்றும் ரோடுகளில் கடைகள் விடுமுறை விடப்பட்டிருந்தன. தீபாவளிக்கு முன்தினம் நள்ளிரவு வரையிலும், தீபாவளி அன்றும் இயங்கிய கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. ஓட்டல்கள், பேக்கரிகள் போன்றவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற காரணத்தால் அவைகளும் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன.