/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்காவுக்கு மாற்றாக பிரிட்டன் - ஐரோப்பிய சந்தை வாய்ப்பு; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
/
அமெரிக்காவுக்கு மாற்றாக பிரிட்டன் - ஐரோப்பிய சந்தை வாய்ப்பு; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
அமெரிக்காவுக்கு மாற்றாக பிரிட்டன் - ஐரோப்பிய சந்தை வாய்ப்பு; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
அமெரிக்காவுக்கு மாற்றாக பிரிட்டன் - ஐரோப்பிய சந்தை வாய்ப்பு; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
ADDED : ஆக 20, 2025 01:11 AM

திருப்பூர்; அமெரிக்காவின் வரி உயர்வால் ஏற்படும், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக பாதிப்பை, பிரிட்டன் மற்றும் ஐரோப்பியாவுடன் உருவாகும் வர்த்தக ஒப்பந்தம் ஈடுகட்டும் என, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், ஐரோப்பிய நாடுகள் முன்னிலையில் இருந்து வந்தன. கடந்த, 2020ம் ஆண்டுக்கு பின், அமெரிக்க ஏற்றுமதி முதலிடத்துக்கு வந்துள்ளது. கடந்த நிதியாண்டில் (2024 - 25), அமெரிக்காவுக்கு மட்டும், 22 ஆயிரத்து, 486 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்தது; இது, மொத்த ஏற்றுமதியில் 34 சதவீதம்.
ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி, 2020 - 21ம் ஆண்டு வரை, அமெரிக்காவுக்கு இணையாக இருந்தது; அதற்கு பிறகு, அமெரிக்க வர்த்தகம் திடீரென அதிகரித்தது; ஐரோப்பிய ஆடை வர்த்தகம் சீரான வளர்ச்சியில் இருந்து வருகிறது.
ஐரோப்பியா 2வது இடம்
கடந்த நிதியாண்டில், 19 ஆயிரத்து, 199 கோடி ரூபாய்க்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது. இது, நமது மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், 29 சதவீதம். மூன்றாவதாக, பிரிட்டனுக்கு, 5,583 கோடி ரூபாய் ஏற்றுமதி நடந்துள்ளது. இது, 9 சதவீதம்.
ஐக்கிய அரபு நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இருப்பதால், 11 ஆண்டுகளாக, பிரிட்டனை காட்டிலும், அதிக அளவு ஆடை ஏற்றுமதி நடந்து வந்தது. நீண்ட இடைவெளிக்கு பின், கடந்த நிதியாண்டில் ஐக்கிய அரபு நாடுகள் ஏற்றுமதி, 4வது இடத்துக்கு சென்றுள்ளது. கடந்த நிதியாண்டில், 5,403 கோடி ரூபாயக்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது. இது, 8 சதவீதம்.
பிரிட்டனுடன் ஒப்பந்தம்
கடந்த, 12 ஆண்டுகால போராட்டத்தால், பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேபோல, 27 நாடுகளை கொண்டுள்ள ஐரோப்பிய யூனியனுடன், டிச., மாத இறுதிக்குள், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகுமென, மத்திய ஜவுளித்துறை உறுதி அளித்துள்ளது.
புதிய அறிவிப்பால் மகிழ்ச்சி
இந்நிலையில், இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு, அமெரிக்கா, இரண்டாம் நிலை வரியாக, 25 சதவீதம் விதித்ததால், மொத்த வரி, 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரும், 27 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர். அதற்குள், புதிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் குறையவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவுடன் மட்டும் வர்த்தகம் செய்து வந்த ஏற்றுமதியாளர்கள், ஐரோப்பியா மற்றும் பிரிட்டனை நோக்கி திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ரஷ்ய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் இடையே நடந்த மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின், அமெரிக்கா வரி உயர்வு விவகாரம், விரைவில் சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை வலுவாகியிருக்கிறது.
சர்வதேச அளவிலான வர்த்தகத்தில், ஒரு சில நாடுகளை மட்டுமே பெரிதும் சார்ந்திருக்க கூடாது; முன்னணி நாடுகள் அனைத்துடனும் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை
ஒதுக்க முடியாது
வங்கதேசத்துக்கு, ஐரோப்பியாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இருக்கிறது; 'பூஜ்ய வரி' என்ற சலுகை கிடைத்து வருகிறது. அப்படியிருந்தும், ஐரோப்பிய யூனியனுக்கு உட்பட்ட, 27 நாடுகளுக்கு, 29 சதவீதம் அளவுக்கு, நாம் ஏற்றுமதி செய்கிறோம்.
புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி, வரிவிலக்கு சலுகை கிடைத்தால், ஒரே ஆண்டில், வர்த்தகம் இரட்டிப்பாக உயரும். பிரிட்டன் வர்த்தகம் கையெழுத்தாகி, விரைவில் அமலுக்கு வருவதால், அடுத்த நிதியாண்டில் இருந்து, அதற்கான பயன் பரஸ்பரம் கிடைக்கும்; பிரிட்டனுக்கான ஏற்றுமதியும் கணிசமாக உயரும். இதன்மூலமாக, அமெரிக்க ஏற்றுமதி வர்த்தக பாதிப்பை, விரைவில் ஈடுகட்டிவிட முடியும். அதற்காக, அமெரிக்காவை முற்றிலும் புறம் தள்ளமுடியாது.
நல்ல வர்த்தக உறவு நிலவுவதால், அதை பாதுகாக்கவும் சில நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, இடையேயுள்ள சில மாதங்களை, நஷ்டமில்லாமல் கடக்க, மத்திய அரசின் சிறப்பு நிவாரண சலுகைகள் அவசியம் வேண்டும்.
- திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்