/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயல்படாமல் மூடி கிடக்கும் தொழிலாளர் தங்கும் விடுதிகள் திறக்க திருப்பூர் தொழில் நிறுவனங்கள் கோரிக்கை
/
செயல்படாமல் மூடி கிடக்கும் தொழிலாளர் தங்கும் விடுதிகள் திறக்க திருப்பூர் தொழில் நிறுவனங்கள் கோரிக்கை
செயல்படாமல் மூடி கிடக்கும் தொழிலாளர் தங்கும் விடுதிகள் திறக்க திருப்பூர் தொழில் நிறுவனங்கள் கோரிக்கை
செயல்படாமல் மூடி கிடக்கும் தொழிலாளர் தங்கும் விடுதிகள் திறக்க திருப்பூர் தொழில் நிறுவனங்கள் கோரிக்கை
ADDED : ஏப் 20, 2025 03:06 AM

திருப்பூர்: திருப்பூரில் செயல்படாமல் உள்ள பெண் தொழிலாளர்களுக்காக அரசு சார்பில் கட்டப்பட்ட விடுதியை விரைவில் செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் பின்னலாடை தொழிலில், 70 சதவீதம் பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர் பாதுகாப்பாக தங்கியிருக்க, தங்கும் விடுதி வசதி இல்லை. குறைந்தபட்சம், 10,000 பெண்கள் தங்கும் வகையில் விடுதி வசதி வேண்டுமென, தொழில் அமைப்புகள் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கடந்த 2014ல் சமூகநலத்துறை சார்பில், 50 பெண் தொழிலாளர் தங்கும் வகையில், நெருப்பெரிச்சல் அருகே கட்டடம் கட்டப்பட்டது. அதில், பெண் தொழிலாளர்கள் தங்கி வருகின்றனர்.
பின், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் சார்பில், 570 பெண் தொழிலாளர் தங்கும் வகையில் விடுதி கட்டப்பட்டது.
தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன், 57 பிரிவுகளுடன் விடுதி வளாகம் அமைக்கப்பட்டது. மொத்தம், 1.5 ஏக்கர் பரப்பளவில், சமையலறை, குடிநீர், கழிப்பிடம் உட்பட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டது.
கடந்த 2019ல் திறப்பு விழா நடத்தி, பின்னலாடை நிறுவனங்களே, தங்கள் தொழிலாளரை தங்கவைத்து, விடுதியை பராமரிக்க ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், பணியாளர்களை நியமித்து, விடுதியை பராமரித்து வந்தது. இதற்கிடையே, கொரோனா பரவிய போது, பெண் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால், விடுதி காலி செய்யப்பட்டது.
கொரோனா காலம் முடிந்து, தொழிற்சாலைகள் முழுவீச்சில் செயல்படத் துவங்கி, சில ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், தொழிலாளர் தங்கும் விடுதி இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. மகளிர் விடுதி மட்டுமல்லாது, அதன் பின் கட்டப்பட்ட, 200 ஆண்கள் தங்கும் வகையிலான விடுதி கட்டடமும் திறக்கப்படவில்லை.
இதனால் பாதுகாப்பில்லாத சூழலில், கூடுதல் வாடகை செலவிட்டு, தொழிலாளர்கள் வெளி இடங்களில் தங்கும் சூழலுக்கு ஆளாகி உள்ளனர்.
தொழிலாளர் விடுதிகளை விரைவில், பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென, தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

