/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட மரங்கள் வெட்டி சாய்ப்பு; கதர் வாரிய இடத்தில் அத்துமீறல்
/
'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட மரங்கள் வெட்டி சாய்ப்பு; கதர் வாரிய இடத்தில் அத்துமீறல்
'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட மரங்கள் வெட்டி சாய்ப்பு; கதர் வாரிய இடத்தில் அத்துமீறல்
'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட மரங்கள் வெட்டி சாய்ப்பு; கதர் வாரிய இடத்தில் அத்துமீறல்
ADDED : ஆக 16, 2025 10:10 PM

திருப்பூர்; திருப்பூர் அருகே, கதர் வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் நடப்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெள்ளகோவில், மயில்ரங்கம் பகுதியில் கதர் வாரியத்துக்குச் சொந்தமான இரு கட்டடங்கள் அதனுடன் நான்கு ஏக்கர் நிலமும் உள்ளது. நீண்ட காலமாக கட்டடமும், இடமும் பயன்பாடின்றி வெறுமனே கிடக்கிறது. கடந்த, 2020ல், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் இந்த காலியிடத்தில், ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஏறத்தாழ இரண்டு லட்சம் ரூபாய் செலவில், காங்கயம் நிழல்கள் அமைப்பு மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இணைந்து இதை நட்டு பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர். இங்கு மரக்கன்றுகள் நட்டு, சொட்டு நீர்ப் பாசன வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில் ஐந்தாண்டுகளில் இப்பகுதியில் மரங்கள் பெருமளவு வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. நேற்று முன்தினம் அப்பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று மின் கம்பங்கள் நடும் பணிக்காக இந்த இடத்தில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டது. ரோட்டோரம் மின் கம்பங்கள் பதித்து செல்வதற்குப் பதிலாக கதர் வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் மின் கம்பங்கள் பதித்து பாதையாகப் பயன்படுத்தும் வகையில் இப்பணி நடந்தது.
பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு, 100 மரங்களை அகற்றியும், சொட்டு நீர்ப்பாசன பைப்புகளை சேதப்படுத்தியும் பணி நடந்தது. இது குறித்த தகவல் அறிந்து பசுமை ஆர்வலர்கள் அங்கு திரண்டனர். எந்த அனுமதியும் இன்றி, பசுமையான மரங்களை வெட்டியும் பணி செய்வது குறித்தும் தட்டிக் கேட்டனர். இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
கதர் வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இருப்பினும் யாரும் இதுவரை அங்கு சென்று இது குறித்து விசாரிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ செல்லவில்லை.