ADDED : ஆக 28, 2025 11:18 PM

தி ருப்பூரில் நடந்த பேட்மின்டன் மாநில சாம்பியன்ஷிப் பட்டத்தை திருப்பூர் மாணவர்கள் பெற்றனர்.
தமிழ்நாடு மாநில பேட்மின்டன் அசோசியேஷன் சார்பில் 13 வயது பிரிவு சப்ஜூனியர் மாநில சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டிகள் திருப்பூர் மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமி வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்தது.
திருப்பூர் பேட்மின்டன் அசோசியேஷன் நடத்திய இப்போட்டிகளில், 13 வயது பிரிவில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக ஒற்றையர் மற்றும் இரட்டையர் அணி போட்டிகள் நடந்தன. மாநில அளவில் 600 பேர் கலந்து கொண்டனர்.
நேற்று இறுதிப் போட்டிகள் நடந்தன. ஒற்றையர் ஆண்கள் பிரிவில் திருப்பூரைச் சேர்ந்த வேதாந்த்ராம், சென்னையைச் சேர்ந்த பிரணவை வெற்றி கண்டார். ஒற்றையர் பெண்கள் பிரிவில், திருச்சி நிதிக் ஷாவை எதிர்த்து விளையாடிய, செங்கல்பட்டைச் சேர்ந்த மிருதுளா வெற்றி பெற்றார். மேலும், பெண்கள் இரட்டையர் பிரிவில், மதுரை அப்சானா - நிஹரிகா ஜோடியை, சென்னை ஜெய்ஸ்ரீ - செங்கல்பட்டு சுவேதா ஜோடி வென்றது.
ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில், துாத்துக்குடி இன்பான்ட் ஜூடோ - திருவள்ளூர் சோமேஸ்வரன் ஜோடியை எதிர்த்து விளையாடிய திருப்பூர் வேதாந்த்ராம் - ஜெய்முகுந்தன் ஜோடி வென்றது.
இறுதிப் போட்டி, அரையிறுதி போட்டி, காலிறுதி மற்றும் அரைகால் இறுதி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம், 2.40 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
மாநில சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழா, மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமி வளாகத்தில் நேற்று நடந்தது.
முன்னதாக, மாநில அசோசியேஷன் பொருளாளர் மோகன் குமார் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் அருணாசலம் பரிசுகளை வழங்கினார். மாவட்ட அசோசியேஷன் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் ராஜ்மோகன், ராமகிருஷ்ணன், சுரேந்திரன், வினோத்குமார், முத்துக்குமரன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் முன்னிலை வகித்தனர்.