ADDED : செப் 21, 2011 12:04 AM
திருப்பூர் : கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் நேற்று
மாற்றுத்திறனாளிகள் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.
'மாற்றுத்திறனாளிகள், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெறுவதற்கு,
ஊனத்தின் சதவீதம் 60க்கு மேலும், 45 வயது இருக்க வேண்டும் என்ற விதிமுறையை
தளர்த்த வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் வருவாயை கணக்கிடுவது என்ற கடுமையான
விதிமுறையை நீக்கி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்
உள்ளதைபோல், அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
'மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் பராமரிப்பு தொகை வழங்காமல்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்க வேண்டும். உதவித்தொகையை வங்கியில்
'எலக்ட்ரானிக் கிளீயரிங் சிஸ்டம்' மூலம் வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்
பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன்
தொடர் முழக்க போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஸ், மாநில குழு
உறுப்பினர் ஜெயபால், பொறுப்பாளர் சந்திரன், மாவட்ட செயலாளர் ரங்கராஜ்,
நிர்வாகிகள் பைசா அகமது, காளியப்பன், சவுந்தரராஜ், ஆறுமுகம், ராஜன், வசந்த்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.