/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடை கடக்க விடை தெரியும் என்றும் சாதிப்பதே திருப்பூரின் 'தொழில் படை!'
/
தடை கடக்க விடை தெரியும் என்றும் சாதிப்பதே திருப்பூரின் 'தொழில் படை!'
தடை கடக்க விடை தெரியும் என்றும் சாதிப்பதே திருப்பூரின் 'தொழில் படை!'
தடை கடக்க விடை தெரியும் என்றும் சாதிப்பதே திருப்பூரின் 'தொழில் படை!'
ADDED : ஆக 29, 2024 11:09 PM

சிக்கல்கள் இல்லாமல் தொழில் இல்லை. சிக்கல்களைக் கடந்து, சீரான தொழில்முனைவை நோக்கிப் பயணப்படுவதே திருப்பூரின் தொழில்துறை. தடைகள் தொடரும்; அவற்றைத் தாண்டிய வெற்றிகளையும் சாத்தியமாக்குபவர்கள், தொழில்துறையினர்.
தேசிய சிறுதொழில் தினத்தில், திருப்பூர் தொழில்துறையினர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
45 நாள் விதிமுறையால் புதிய சிக்கல்
பாலச்சந்தர், துணைத்தலைவர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா): உத்யோக் 'ஆதார்' பதிவு செய்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உரிய கடன் தொகைகளை, 45 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்கிற விதிமுறையால் புதிய சிக்கல் ஏற்படுகிறது. திருப்பூரிலிருந்து ஆடை தயாரித்து பெறும் வெளிமாநில வர்த்தகர்கள் பலர், இந்த கட்டுப்பாட்டை விரும்புவதில்லை. இதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடமிருந்து ஆடை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்; தொகை வழங்குவதில் கட்டுப்பாடுகள் இல்லாத பெரிய நிறுவனங்களுக்கு ஆர்டர்களை வழங்கிவிடுகின்றனர். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை போன்று, பெரிய நிறுவனங்களையும், இந்த சட்டதிட்டத்துக்குள் கொண்டுவரவேண்டும்.
சில ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்காக நிறுவன வளாகத்திலேயே கேன்டீன் செயல்படுத்தி வருகின்றன. இந்த கேன்டீன்களுக்கும் ஜி.எஸ்.டி.,செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்புவதால் குழப்பங்கள் ஏற்படுகிறது. இத்தகைய ஜி.எஸ்.டி., சார்ந்த குழப்பங்களை களைய, 'சைமா' சார்பில், அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மின் கட்டண உயர்வுதொழில்முனைவோர் கவலை
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம்: மத்திய அரசு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினாலும்கூட, அவற்றின் பயன் முழுமையாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை சென்றடையவில்லை. வங்கி கடன் பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள், மின் கட்டண உயர்வால், திருப்பூரில் குறு, சிறு நிலையில் உள்ள பின்னலாடை உற்பத்தி தொழில்முனைவோர் பலர், தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கும் தமிழக அரசு, அதற்கு தேவையான தொகையை, வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மூலம், குறு, சிறு நிறுவனங்களிடமிருந்தே உறிஞ்சுவது கவலை அளிக்கிறது. பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், மின்கட்டணம், மின்நிலை கட்டணம், பீக்ஹவர் கட்டணங்கள் சீரமைக்கப்படவில்லை.
மத்திய, மாநில அரசுகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் தொலைநோக்கு திட்டங்களை வகுத்து செயல்படுத்தவேண்டும்.
குறு, சிறு நிறுவனங்களுக்கானமூலதன மானியம் நிறுத்தம்
தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை: திருப்பூரில், மத்திய, மாநில அரசு மானியம் பெற்று, பொது பயன்பாட்டு மையங்கள் அமைப்பதற்கு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, தொழில் பாதுகாப்புக்குழு முழு வழிகாட்டுதல்களையும் வழங்கிவருகிறது.
கிளஸ்டர் மேனேஜ்மென்ட் திட்டம் மூலம், பெரிய நிறுவனங்களுக்கு இணையாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும், பொது பயன்பாட்டு மையங்களில் அதிநவீன தொழில்நுட்பங்களை நிறுவ முடிகிறது. இதன்மூலம், உற்பத்தி வேகம் அதிகரிப்பு, பொருளின் தரத்தில் மேம்பாடு, புதுமைகள் உருவாக்கம் எளிதாகிறது.
குறு, சிறு, நிறுவனங்களுக்கு வழங்கிவந்த 15 சதவீத மூலதன மானியத்தை மத்திய அரசு நிறுத்திவிட்டது; இந்த மானியம் மீண்டும் வழங்கப்படவேண்டும். தமிழக அரசை பொறுத்தவரை, தையல் இயந்திரங்களுக்கான மூலதனத்துக்கு மட்டுமே 25 சதவீதம் மானியம் வழங்குகிறது. பின்னலாடை உற்பத்தி துறையை பொறுத்தவரை, நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, காஜாபட்டன் என, பல்வேறு நிலைகளை கடந்தே ஆடை தயாரிப்பு முழுமை பெறுகிறது. பின்னலாடை உற்பத்திக்கு கைகொடுக்கும் அனைத்துவகை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் மூலதன மானியம் வழங்கவேண்டும். சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுவதற்கு, எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கு சிறப்பு முதலீட்டு மானியங்கள் வழங்கவேண்டும்.
தவறான நோட்டீஸ்கள்வர்த்தகர்கள் தவிப்பு
ஆடிட்டர் தனஞ்செயன்: கடந்த 2019 - 20ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி., கணக்குகளை தாக்கல் செய்ய, வரும் 31ம் தேதி கடைசி நாள். கணக்குகளை ஆய்வு செய்து, முரண்பாடுகள், தவறுகள் இருப்பின், உறுதி செய்தபின் அதிகாரிகள், வர்த்தகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிவைப்பர்.
தற்போது, ஐதராபாத் ஐ.ஐ.டி., டேட்டா அனலெட்டிக்ஸ் மூலம், தவறாக உள்ளீட்டு வரி எடுக்கப்பட்டுள்ளது, வரி செலுத்தியதில் முரண்பாடு என்பது போன்று, வர்த்தகர்களுக்கு சகட்டுமேனிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுவருகிறது. ஆய்வு செய்யும்போது, முறையாக வரி செலுத்தி, உள்ளீட்டு வரி வரவு எடுத்தது உறுதி செய்யப்படுகிறது. அதாவது, 80 சதவீத நோட்டீஸ்கள், தவறாகவே அனுப்பப்பட்டுவருகின்றன.
பெரிய நிறுவனங்கள் இந்த குழப்பத்தை எளிதாக எதிர்கொண்டாலும்கூட, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், நோட்டீஸ்களை பார்த்து பயந்துபோகின்றனர். இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டியது அவசியம்.