/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாசன நீரை சேகரிக்க...! காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணி தீவிரம்; பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்துக்கு ஆயத்தம்
/
பாசன நீரை சேகரிக்க...! காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணி தீவிரம்; பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்துக்கு ஆயத்தம்
பாசன நீரை சேகரிக்க...! காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணி தீவிரம்; பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்துக்கு ஆயத்தம்
பாசன நீரை சேகரிக்க...! காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணி தீவிரம்; பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்துக்கு ஆயத்தம்
ADDED : ஜன 09, 2025 11:31 PM

உடுமலை; பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தேவையான பாசன நீரை, தொகுப்பு அணைகளில் இருந்து பெற, காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது; வரும் 29ல், மண்டல பாசனத்துக்கு, நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் சேகரிக்கப்பட்டு, முழுவதும் மலைப்பகுதிகளில், 49.3 கி.மீ., நீளம் அமைந்துள்ள காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வரப்பட்டு, திருமூர்த்தி அணையில் சேகரிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் ஆதாரமாக உள்ள, காண்டூர் கால்வாய் ஆண்டு பராமரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இக்கால்வாயில், வட கிழக்கு பருவ மழையின் போது, 36வது கி.மீ., ல் பாறைகள் உருண்டு விழுந்தது.
அதே போல், 47 வது கி.மீ., ல், சிலாப்கள் உடைந்து, நீர்க்கசிவு ஏற்பட்டது. கால்வாயில் விழுந்த பாறைகள் உடைத்து அகற்றப்பட்டதோடு, உடைப்பு, கசிவுகள் அடைக்கப்பட்டது.
இதே போல், திருமூர்த்தி கோட்டத்திற்குட்பட்ட, 19.2 கி.மீ., நீளம் அமைந்துள்ள காண்டூர் கால்வாய் முழுமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறப்பு எப்போது?
அதிகாரிகள் கூறியதாவது:
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94 ஆயிரத்து, 201 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்தாண்டு, ஆக., 18ம் தேதி நீர் திறக்கப்பட்டது.
முதல் கட்டமாக, 8 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்கவும், இரண்டாம் முறை, டிச., 16ல், 2 ஆயிரம் மில்லியன் கனஅடி என, ஐந்து சுற்றுக்களில் நீர் வழங்க அரசு உத்தரவிட்டது.
இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, முதல் இரண்டு சுற்றுக்கள் இடைவெளியின்றியும், மூன்றாம் சுற்றுக்கு முன், இடைவெளி விடப்பட்டது.
தொடர்ந்து, 3, 4 மற்றும் 5ம் சுற்றுக்களில், 9,467 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்பட்டு, ஜன.,4 ல், இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு செய்யப்பட்டது.
பருவ மழைகள் காரணமாக, இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டதோடு, இழப்புகள் குறைந்ததால், 533 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு, வரும், 29 முதல், 5 சுற்றுக்களில், 10 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஆண்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால்வாயில் நீர் எடுப்பது, கடந்த, 31ல் நிறுத்தப்பட்டு, ஆழியாறு மற்றும் திருமூர்த்தி கோட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், திருமூர்த்தி அணையிலிருந்து, வட்டமலைக்கரை ஓடை அணைக்கு, 10 நாட்கள் நீர் வழங்கப்பட்டு, வரும், 18ல் நிறைவு செய்யப்படுகிறது.
அதற்கு பின், காண்டூர் கால்வாயில் பாசன நீர் எடுத்து, திருமூர்த்தி அணையில் சேகரிக்கப்பட்டு, வரும், 29ம் தேதி முதல், மூன்றாம் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.