/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாசுபடும் நொய்யல் நதியை காப்பாற்ற...
/
மாசுபடும் நொய்யல் நதியை காப்பாற்ற...
ADDED : ஜன 28, 2025 05:48 AM
திருப்பூர் : கோவையில் துவங்கி திருப்பூர் வழியாக ஓடி, காவிரியில் கலக்கும் நொய்யல் நதியில் மாசு அதிகரித்துள்ள நிலையில், விழிப்புணர்வு பாடல் தயாரித்து, சினிமா தியேட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில், தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில், வெள்ளியங்கிரி மலையிலிருந்து உருவாகும் ஓடைகள் இணைந்து, நொய்யல் ஆறாக உருவெடுத்துள்ளது. பேரூர், குனியமுத்துார், வெள்ளலுார், இருகூர், சூலுார், மங்கலம், திருப்பூர் மற்றும் ஒரத்துப்பாளையம் என, 180 கி.மீ., பயணித்து, கரூர் அருகே நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.
குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் ஓடும் நொய்யலாறு மாசுபட்டு கிடக்கிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர் மற்றும் நொய்யல் ஆற்றையொட்டியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை, கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கின்றன. இதனால், கேன்சர் உள்ளிட்ட உயிர் கொல்லும் நோய் பரவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'நொய்யல் நதியை மீட்டெடுக்க வேண்டும்' என பல்வேறு தன்னார்வ அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் ரோட்டரி மற்றும் திருப்பூர் இயற்கை கழகம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் இணைந்து, நொய்யல் நதியை மீட்டெடுப்பது குறித்து விழிப்புணர்வு பாடல் தயாரித்துள்ளனர். நேற்று முன்தினம், பல்லடம் பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் திரையிட்டனர்.
'மக்களின் வாழ்வாதாரமாக இருந்த நொய்யல் நதி, மனிதர்களின் செயலால் வீணாய் போனது. தொழிற்சாலை ரசாயன கழிவு, வீடுகளில் இருந்து கொட்டப்படும் குப்பையால் நொய்யல் மாசுபடுகிறது. இயற்கை தந்த வளங்களை பாதுகாப்பது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்' என்ற கருத்தை மையப்படுத்துவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.
இந்த விழிப்புணர்வு பாடலை சினிமா தியேட்டர்களில் ஒளிபரப்ப தன்னார்வ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

