/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகையிலை விற்ற கடைகளுக்கு ரூ.15.50 லட்சம் அபராதம்
/
புகையிலை விற்ற கடைகளுக்கு ரூ.15.50 லட்சம் அபராதம்
ADDED : பிப் 21, 2025 12:12 AM
திருப்பூர்; உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் நடத்திய ஆய்வில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 48 கடைகள் சிக்கியுள்ளன; மொத்தம் ரூ.15.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கடைகளை மூடியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் ஆய்வு நடத்திவருகின்றனர். தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து முதல் முறை பிடிபடும் கடைகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 15 நாட்கள் கடைகளை மூடியும்; இரண்டாவது முறை பிடிபடும்போது 50 ஆயிரம் அபராதமும், 30 நாட்கள் கடைகளை மூடியும்; மூன்றாவது முறை பிடிபடும் கடைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 90 நாட்கள் கடைகளை முடக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
48 கடைகள் சிக்கின
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர் குழுவினர், பள்ளி அருகே உள்ள பெட்டிக்கடைகள், டாஸ்மாக் பார் கடைகள் மற்றும் சுற்றுப்பகுதி கடைகள், மளிகை கடைகளில் ஆய்வு நடத்தினர். இம்மாதம் 1 முதல் 18 ம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில், ஹான்ஸ், குட்கா, கூல்லிப், பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 48 கடைகள் சிக்கின.
முதல் முறை பிடிபட்ட 38 கடைகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், 9.50 லட்சம் ரூபாய்; இரண்டாவது முறை பிடிபட்ட 8 கடைகளுக்கு, 50 ஆயிரம் வீதம், 4 லட்சம் ரூபாய்; மூன்றாவது முறையாக பிடிபட்ட 2 கடைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், 2 லட்சம் ரூபாய் என, மொத்தம் 15.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டும், கடைகளை மூடியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.