/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு... தண்ணீர் திறப்பு!அமராவதி பிரதான கால்வாய் பணிகள் நிறுத்தம்
/
இன்று புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு... தண்ணீர் திறப்பு!அமராவதி பிரதான கால்வாய் பணிகள் நிறுத்தம்
இன்று புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு... தண்ணீர் திறப்பு!அமராவதி பிரதான கால்வாய் பணிகள் நிறுத்தம்
இன்று புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு... தண்ணீர் திறப்பு!அமராவதி பிரதான கால்வாய் பணிகள் நிறுத்தம்
ADDED : ஜூலை 22, 2024 03:04 AM

உடுமலை;அமராவதி அணை நிரம்பி, உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைத்து, இன்று, (22ம் தேதி) முதல் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும் தண்ணீர் வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையிலிருந்து வழக்கமாக, ஜூன் முதல் வாரத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கும், ஆக., மாதத்தில் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கும் நீர் திறக்கப்படும்.
கடந்தாண்டு பருவமழைகள் குறைந்தது மற்றும் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தாமதம் காரணமாக, அணை நீர் இருப்பு குறைவாக இருந்தது.
அணை நீர்இருப்பு மற்றும் பருவமழை நீர்வரத்தை கணக்கிட்டு, பழைய ஆயக்கட்டு பாசனம், எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த ஜூன் 24ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலங்களில், குறுவை நெல் சாகுபடிக்காக, வரும் நவ., 6 வரை, 135 நாட்களில், 80 நாட்கள் நீர்திறப்பு, 55 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில் நீர் வழங்கப்பட உள்ளது.
உபரி நீர் வெளியேற்றம்
அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, கடந்த, 18ம் தேதி மாலை நிரம்பியது. இதனையடுத்து, அணையிலிருந்து ஆற்று மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் பயன்பெறும், மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கும் நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலங்களுக்கு நீர் வழங்குவது, கடந்த மார்ச் மாதம் நிறைவு செய்யப்பட்டது. நான்கு மாதமாக நீர் திறக்கப்படாதால், நிலையிலுள்ள தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை காப்பாற்ற உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
பணி ஒத்திவைப்பு
புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்படும் பிரதான கால்வாய், 60 ஆண்டுக்கு மேல் பழமையானதாகவும், பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்தும், அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனை முழுமையாக புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட, 7.5 முதல், 16.5 கி.மீ., வரை, 9 கி.மீ.,நீளத்திற்கு, 4.92 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது.
இதில், இரண்டு மேல்மட்ட நீர்வழிப்பாதை, 10 சிறிய அளவிலான சுரங்க நீர் வழிப்பாதை, 20 மதகுகள் புதுப்பிக்கும் பணி கடந்த மே மாதம் துவங்கியது. தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 9 மதகுகள் சீரமைப்பு உள்ளிட்ட சிறிய அளவிலான வேலைகள் நிலுவை உள்ளது.
அணை நிரம்பி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், கால்வாய் புதுப்பிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, பிரதான கால்வாயில் நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

