/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளைபொருட்கள் குழு ஏற்படுத்தணும்! தக்காளி விவசாயிகள் வலியுறுத்தல்
/
விளைபொருட்கள் குழு ஏற்படுத்தணும்! தக்காளி விவசாயிகள் வலியுறுத்தல்
விளைபொருட்கள் குழு ஏற்படுத்தணும்! தக்காளி விவசாயிகள் வலியுறுத்தல்
விளைபொருட்கள் குழு ஏற்படுத்தணும்! தக்காளி விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 18, 2025 09:29 PM

உடுமலை; விலை வீழ்ச்சியை தடுக்க, விளைபொருட்கள் குழு அமைத்து, குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், ஆண்டுமுழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கரில், தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. சந்தைக்கு வரத்து அதிகரிக்கும் போது, விலை வீழ்ச்சியடைந்து, பறிக்கும் கூலிக்கு கூட கட்டுப்படியாவதில்லை.
இதனால், செடிகளில் தக்காளியை பறிக்காமல் விட்டு விடுகின்றனர்; அல்லது, சந்தைக்கு செல்லும் வழியில், ரோட்டோரத்தில் வீசுவது வழக்கமாகி விட்டது. ஒவ்வொரு சீசனிலும், இப்பிரச்னையால், விவசாயிகள் நஷ்டத்துக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், தக்காளியில் இருந்து,'சாஸ்', 'கெச்சப்' உட்பட பல்வேறு உணவு சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அதற்கான பயிற்சிகள் பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்புக்கு அதிக முதலீடு, சந்தை வாய்ப்புகள் உட்பட பிரச்னைகளால், விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, மாற்றுத்திட்டத்தை தோட்டக்கலைத்துறை வாயிலாக அரசு செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் சில மாவட்டங்களில், வேளாண் வணிகத்துறை வாயிலாக, விவசாயிகளை உள்ளடக்கிய, தக்காளி விளைபொருட்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, தக்காளியை விற்பனை செய்கின்றனர்.
அங்குள்ள ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், விவசாயிகள் பயன்பாட்டுக்காக குளிர்பதன கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
இத்தகைய குழுக்களை, உடுமலை பகுதியிலும் துவக்கி, சீசன் சமயங்களில், பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.