ADDED : அக் 07, 2024 01:12 AM

திருப்பூர் : மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால், திருப்பூரில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை தொடர்கிறது. குறிப்பாக தக்காளி செடிகளில் பறித்து, கூடைகளில் அடுக்கும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்வதால், தோட்டங்களில் இருந்து பாதுகாப்பாக தக்காளி எடுத்து வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. வழக்கமாக உள்ளூரில் தட்டுப்பாடு ஏற்படும் போது, வெளியூர் தக்காளி கைகொடுக்கும். ஆனால், தொடர் மழையால் கர்நாடக தக்காளி வரத்தும் குறைந்துள்ளது.
இதனால், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ, தக்காளி, 52 ரூபாய்க்கு விற்றது. 14 கிலோ எடை கொண்ட சிறிய கூடை, 700 முதல், 8000 ரூபாய், 26 கிலோ எடை கொண்ட பெரிய கூடை, 1,250 முதல், 1,350 ரூபாய்க்கு விற்றது. மார்க்கெட்டில் விலை குறைவாக இருந்தாலும், மளிகை கடைகளில் தக்காளி கிலோ, 55 முதல், 60 ரூபாய்க்கு விற்றது.
இன்னமும் ஒரு வாரம் மழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மழை தொடர்ந்தால், தக்காளி விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.