/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழையால் தக்காளி வரத்து சரிவு; விலையும் உயர்வு
/
மழையால் தக்காளி வரத்து சரிவு; விலையும் உயர்வு
ADDED : டிச 03, 2024 11:30 PM

உடுமலை; உடுமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தக்காளி வரத்து குறைந்ததால், விலை உயர்ந்தது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தக்காளி உள்ளிட்ட காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது.
இப்பகுதிகளில் ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விளையும் காய்கறிகள், உடுமலை நகராட்சி மொத்த சந்தை மற்றும் தனியார் சந்தைகளில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழை காரணமாக, உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. செடி முறையில் நடவு செய்யப்பட்டுள்ள தக்காளி, செடிகள் மழைக்கு அழுகியும், காய்கள், பிஞ்சுகள், பூ அழுகியும் பெரும் சேதமடைந்துள்ளது.
ஒரு சில பகுதிகளில், அதிக செலவினம் பிடிக்கும், கொடி முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி செடிகளில் மட்டுமே, குறைந்தளவு காய்கள் காணப்படுகிறது.
இதனால், உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து பெருமளவு குறைந்துள்ளது. சராசரியாக, சந்தைக்கு, 30 ஆயிரம் முதல், 50 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும் நிலையில், தொடர் மழை காரணமாக, 5 ஆயிரம் முதல், 10 ஆயிரம் பெட்டிகள் மட்டுமே வரத்து காணப்படுகிறது.
இதனால், விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம், 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 350 ரூபாய் வரை விற்று வந்தது. நேற்று வரத்து பெருமளவு குறைந்த நிலையில், ஒரு பெட்டி, அதிக பட்ச விலையாக, ரூ.715 வரை ஏலம் போனது.
மழையால் தக்காளி செடிகள் பாதித்து, மகசூல் பெருமளவு குறைந்துள்ள நிலையில், விலை ஏற்றத்தால், பயனில்லை, என விவசாயிகள் தெரிவித்தனர்.