நகரில் பொருத்திய கண்காணிப்பு கேமராக்கள்... முழுவதும் முடக்கம்! பராமரிப்பில் அலட்சியம் காட்டும் போலீசார்
நகரில் பொருத்திய கண்காணிப்பு கேமராக்கள்... முழுவதும் முடக்கம்! பராமரிப்பில் அலட்சியம் காட்டும் போலீசார்
UPDATED : ஜூன் 17, 2026 04:58 PM
ADDED : ஜூன் 17, 2026 04:53 PM

உடுமலை: உடுமலை நகர பகுதிகளில், குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் இயங்காததால், கண்காணிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உடுமலை நகரப்பகுதிகளில், குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையில், நகரின் பாதுகாப்பை கருதி, தொண்டு நிறுவனங்கள் சார்பில், 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
தொடர்ந்து, அவற்றை போலீசார் பராமரிக்காததால், வீணாகியும், திருடப்பட்டும் மாயமானது.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், நகராட்சி சார்பில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், நகராட்சி எல்லை பகுதிகள் முதல் அனைத்து பகுதிகளிலும், 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
உடுமலை பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு, தாரபுரம் ரோடு, திருப்பூர் ரோடு என அனைத்து பிரதான ரோடுகள், நகரிலுள்ள குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள், ரோடு சந்திப்புகள் என நகரின் அனைத்து பகுதிகளிலும், 40 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்த கண்காணிப்பு கேமராக்கள், கேபிள் வாயிலாக இணைக்கப்பட்டு, போலீஸ் ஸ்டேஷனில் அமைக்கப்பட்ட, கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டு, கண்காணிக்கும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டது.
கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஒரு சில மாதங்கள் மட்டும் இயங்கின. தொடர்ந்து கேமராக்கள் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு அறை இணைப்பு ஆகியவை பராமரிக்கப்படாமல், பல மாதங்களாக கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் வீணாக உள்ளது.
இதனால், நகரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ், நகராட்சி நிதி செலவழித்து, போலீஸ் வசம் திட்டம் ஒப்படைக்கப்பட்டும், பராமரிப்பின்றி, நகரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
பல லட்சம் ரூபாய் செலவழித்து அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களும், அதற்கான கட்டமைப்புகளும் பயன்பாடு இல்லாமல், வீணாகி வருகின்றன.
குற்றச்சம்பவங்கள் நடந்தாலும், குற்றவாளிகளை அடையாளம் காண முடியாததோடு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசார் கண்காணிக்கும் திட்டமும் வீணாகியுள்ளது.
எனவே, நகரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களையும் பராமரித்து, கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
