/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்திமலையில் சுற்றுலா தினம் கொண்டாட்டம்
/
திருமூர்த்திமலையில் சுற்றுலா தினம் கொண்டாட்டம்
ADDED : செப் 27, 2024 11:13 PM

உடுமலை: உடுமலை திருமூர்த்திமலையில், உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் முக்கியமானதாக திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள பஞ்சலிங்கம் அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணையை காண, ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டு தோறும் செப்., 27ல் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், நேற்று சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது. உடுமலை அரசு கல்லூரியில், 'சுற்றுலா மற்றும் அமைதி ' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் தலைமை வகித்தார். தொடர்ந்து, சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடந்த, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதே போல், திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் அணைப்பகுதிகளில், உடுமலை அரசு கல்லுாரி, வித்யாசாகர் கல்லுாரி, கமலம் கல்லுாரி, யோகா கல்லுாரி மாணவ மாணவியர், சுற்றுலா ஆர்வலர்கள், சுற்றுலா தொழில் முனைவோர்கள் இணைந்து துாய்மைப்பணி மேற்கொண்டனர்.
தொடர்ந்து, காவடியாட்டம், வள்ளி கும்மி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், திருமூர்த்தி மலை பகுதியிலுள்ள யோகா கல்லுாரியில் சுற்றுலா கருத்தரங்கம் மற்றும் யோகா நிகழ்ச்சி நடந்தது.
இதில், திருப்பூர் சுற்றுலா சங்கங்களின் நிர்வாகிகள், நாகராஜ், குளோபல் பூபதி, மூர்த்தி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவி, தளி பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனா மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் சுற்றுலா தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.