/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரை நோக்கி பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள்: கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆர்டர்கள் வருகை
/
திருப்பூரை நோக்கி பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள்: கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆர்டர்கள் வருகை
திருப்பூரை நோக்கி பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள்: கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆர்டர்கள் வருகை
திருப்பூரை நோக்கி பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள்: கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆர்டர்கள் வருகை
ADDED : நவ 02, 2024 11:03 PM

திருப்பூர்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இயல்புநிலை திரும்பி, சில்லறை விற்பனை சூடுபிடித்துள்ளதால், திருப்பூருக்கான புதிய ஆர்டர்கள் அதிகரித்து வருவதாக, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், 55 சதவீத பங்களிப்புடன், திருப்பூர் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, 35 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி வர்த்தகம், இந்தாண்டில், 40 ஆயிரம் கோடி என்ற இலக்கை அடையும் என்று, மிகுந்த நம்பிக்கை பிறந்துள்ளது.
கடந்த, 2022ல் பஞ்சு விலை உயர்வால் ஏற்பட்ட தொழில் பாதிப்பு, பல்வேறு காரணங்களுக்காக 2023 டிச., மாதம் வரையில் தொடர்ந்தது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, ரஷ்யா - உக்ரைன் போர் சூழலால் ஏற்பட்ட ஐரோப்பிய நாடுகளின் சிக்கன நடவடிக்கையால், இயல்பான வர்த்தகம் பாதித்தது.
திருப்பூருக்கான நேரடி ஆர்டர் வரத்தை தக்கவைக்கவே, தொழில்துறையினர் கடுமையாக போராட வேண்டியிருந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் விடாமுயற்சியுடன் கூடிய கடின உழைப்பால், பழைய வர்த்தகத்தை தக்க வைத்து, தொழிலையும் பாதுகாத்தனர்.
ஜவுளி இறக்குமதி நாடுகளில் இயல்புநிலை திரும்பியது மட்டுமல்ல, 'வளம் குன்றா வளர்ச்சி' நிலை உற்பத்தி கோட்பாடு குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இதனால், பசுமை சார் உற்பத்தியில் பச்சை கொடி பறந்த திருப்பூரை நோக்கி வந்து, வர்த்தக உறவை வளர்த்து கொண்டிருக்கின்றனர்.
இறக்குமதி நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். அதன் எதிரொலியாக, பின்னலாடை, ஆயத்த ஆடைகளின் சில்லறை வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. நீண்ட நாட்களாக தேங்கியிருந்த சரக்குகள் விற்றுத்தீர்ந்ததால், அடுத்து வரும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விற்பனைக்கு தயாராக வேண்டுமென, ஏற்றுமதியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயல்பு நிலை
கடந்த பிப்., மாதத்தில் இருந்தே, திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியது; ஜூன் மாதத்தில் இருந்து வளர்ச்சி பாதையிலும் பயணிக்க துவங்கி விட்டது.
இந்நிலையில், கடும் சிரமங்களுக்கு பின், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் விரிவாக துவங்கியிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் வர்த்தகர்கள், நேரடியாக திருப்பூருக்கு வந்து, பின்னலாடை உற்பத்தி படிநிலைகளை பார்வையிட்டு திருப்தியடைந்து, புதிய ஆர்டர்களை வழங்கி வருகின்றனர். குறிப்பாக, வங்கதேசம், சீனாவுடன் நீண்டகால தொடர்பில் இருந்த நிறுவனங்கள், இந்தியாவுடனான வர்த்தக உறவை விரும்பி வந்துள்ளன.
முழு வீச்சில் தயாராகணும்!
ஜவுளி இறக்குமதி நாடுகளில், கையிருப்பு வைத்திருந்த ஆடைகள் விற்றுத்தீர்ந்தன; இயல்பு நிலை திரும்பிய பிறகு சில்லரை விற்பனை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, புதிய ஆர்டர்கள், திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இந்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விற்பனை பரபரப்பாக நடக்கும் என்று நம்புகின்றனர். அதற்காக, விழாக்கால விற்பனைக்கான ஆர்டர்கள் புதிதாக வந்துள்ளன. விரைவாக, உற்பத்தியை நிறைவு செய்து, ஆடைகளை அனுப்பி வைக்க, திருப்பூர் பனியன் நிறுவனங்கள் முழு வீச்சில் தயாராக வேண்டும்.
- திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்