ADDED : ஜன 14, 2025 09:27 PM

உடுமலை:
பொங்கல் திருநாளை முன்னிட்டு, உடுமலை பகுதிகளில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நகர பகுதியில், குடியிருப்போர் நல சங்கங்கள் மற்றும் இளைஞர்கள் சார்பிலும், கிராமங்களில் பொது இடங்களிலும், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு என, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இளவட்டக்கல் துாக்குதல், வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், சாக்குப்போட்டி, கோலப்போட்டி, ஸ்லோ சைக்கிள், லெமன் ஸ்பூன், மியூசிக்கல் சேர், லக்கி கார்னர், டம்ளர் கேம், தண்ணீர் நிரப்புதல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும், பாட்டு மற்றும் பாரம்பரிய இசைக்கருவிகள் வாசித்தும், உறவுகளுடனும், நண்பர்களுடனும், உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு பகுதியிலும், குடியிருப்போர் நலச்சங்கம் சார்பிலும், பொதுநல அமைப்புகள் சார்பிலும், பொங்கல் விழா நடந்தது.
போட்டிகள் நடத்தி மக்களை உற்சாகப்படுத்தினர்.