/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளி நெரிசல் தடுக்க போக்குவரத்து மாற்றம்
/
தீபாவளி நெரிசல் தடுக்க போக்குவரத்து மாற்றம்
ADDED : அக் 16, 2025 05:53 AM
திருப்பூர்: தீபாவளியை முன்னிட்டு, திருப்பூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றங்களை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
தீபாவளி நெருங்கியுள்ளதால், திருப்பூரில், வணிக நிறுவனங்கள் நிறைந்த பிரதான ரோடுகளில், போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது. குமரன் ரோடு, பல்லடம், காங்கயம் ரோடு, காமராஜர் ரோடு உள்ளிட்ட ரோடுகள் வாகனங்களால் ததும்புகின்றன.
முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்துள்ள போலீசார், பாதசாரிகள் நடந்து செல்ல ரோட்டோரம் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இன்று முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் தொலைதுார இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் செல்லும் மக்கள், கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்களின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இன்று முதல் மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் அமலாகின்றன.
மத்திய பஸ் ஸ்டாண்ட் :
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து நல்லுார் வழியாக காங்கயம், கரூர் செல்லும் பஸ்களும்; பல்லடம் வழியாக கோவை செல்லும் பஸ்களும்; பல்லடம் வழியாக உடுமலை, பொள்ளாச்சி செல்லும் பஸ்களும்; மங்கலம், சோமனுார் வழியாக கோவை செல்லும் பஸ்களும்; ஈரோடு, பவானி செல்லும் பஸ்களும் இயக்கப்படும்.
தற்காலிக பஸ் ஸ்டாண்ட்:
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அரசு சித்தா மருத்துவமனை வளாகத்தில் இருந்து சேலம் மற்றும் திருவண்ணாமலை வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.
கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்:
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் பிற தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் கோவில் வழி பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படும்.
புதிய பஸ் ஸ்டாண்ட்:
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களும்; திருச்சி, கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை வழித்தடங்களில் செல்லும் அனைத்து பஸ்களும் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படும்.
அவிநாசி ரோட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் பூண்டி ரிங் ரோடு, பூலுவபட்டி, நெருப்பெரிச்சல், வாவிபாளையம், கூலிபாளையம் நால் ரோடு வழியாக காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு வழியாக சென்று தென் மாவட்டங்களுக்கு செல்லும்.
திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் செல்லும் வாகனங்கள் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து போயம்பாளையம், பூலுவபட்டி வழியாக நெருப்பெரிச்சல், வாவிபாளையம், கூலிபாளையம் நால் ரோடு வழியாக காங்கயம் ரோடு செல்லலாம்.