/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு
/
போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு
ADDED : ஏப் 02, 2025 07:12 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட் பட்ட பகுதியில் வடக்கு, தெற்கு, அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், திருமுருகன் பூண்டி, நல்லுார், வீரபாண்டி, சென்ட்ரல் மற்றும் மங்கலம் என, ஒன்பது ஸ்டேஷன்கள் உள்ளன.
இந்த ஸ்டேஷன் எல்லை பகுதிகளில் நடக்கும் வாகன விபத்து உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான பிரச்னைகளுக்கு வழங்கு பதிவு செய்தல், புலனாய்வு செய்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மாநகரில் உள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரே செய்ய வேண்டும். ஆனால், இப்பிரிவு துவங்கியதில் இருந்து பெயரளவில் மட்டுமே இயங்கி வந்தது. விபத்து வழக்குகளை எல்லாம் சட்டம் - ஒழுங்கு போலீசாரே விசாரித்து வந்தனர்.
கமிஷனர் முயற்சியால், போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ஒரு எஸ்.ஐ., இரண்டு எஸ்.எஸ்.ஐ., போலீஸ் ஏட்டு உள்ளிட்ட, 12 போலீசார் இப்பிரிவுக்கு மாற்றப்பட்டனர். இந்த போக்குவரத்து புலனாய்வு ஸ்டேஷன் வடக்கு ஸ்டேஷன் வளாகத்தில் பின்புறம் உள்ள கட்டடத்தில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் இன்று முதல் செயல்பட துவங்குகிறது.
இனி வரும் நாட்களில் மாநகர எல்லைக்குள் ஏற்படும் விபத்து தொடர்பான வழக்குகளை சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் வழக்குபதிவு மட்டும் செய்யப்பட்டு, அதன்பின் முழுமையான விசாரணையை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.
இதனால், சட்டம் - ஒழுங்கு பிரிவு போலீசாருக்கான பணிச்சுமையும் குறையும், பணியில் கூடுதல் கவனமும் செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
விரைவில் கூடுதல் போலீஸ்
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:
நகரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு வடக்கு, தெற்கு என, இரு பிரிவுகளாக செயல்பட உள்ளது. இதற்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான வழக்கை இனிமேல் இவர்கள் விசாரிக்க உள்ளனர்.
கூடுதல் போலீசாரை நியமிக்கவும், இப்பிரிவிலே வழக்குபதிவு செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ள உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரவு வந்த பின் முழுமையாக செயல்படும். அதுவரை தற்போது உள்ள போலீசாருடன் விபத்து தொடர்பான வழக்கை இப்பிரிவினர் விசாரிப்பர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

