/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிற்சியே முதல் படி அதிநவீன பிரின்டிங் இயந்திரங்கள் கையாள்வதில் திறன் அவசியம்
/
பயிற்சியே முதல் படி அதிநவீன பிரின்டிங் இயந்திரங்கள் கையாள்வதில் திறன் அவசியம்
பயிற்சியே முதல் படி அதிநவீன பிரின்டிங் இயந்திரங்கள் கையாள்வதில் திறன் அவசியம்
பயிற்சியே முதல் படி அதிநவீன பிரின்டிங் இயந்திரங்கள் கையாள்வதில் திறன் அவசியம்
ADDED : ஏப் 19, 2025 11:30 PM
திருப்பூர்: புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப பின்னலாடை பிரின்டிங் இயந்திரங்களை சிரமமின்றி கையாள ஏதுவாக, திருப்பூரில் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
திருப்பூரில் 2,000க்கும் அதிகமான ஏற்றுமதி நிறுவனங்கள், 2,500க்கும் அதிகமான உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பவர்டேபிள் நிறுவனங்கள் மற்றும் நிட்டிங், சாயம், பிரின்டிங், எம்ப்ராய்டரிங் போன்ற 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
''பின்னலாடைத் தொழில், ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளியிலும் பெரும் மாற்றம் பெற்று வருகிறது. பின்னலாடை உற்பத்தியை, மதிப்பு கூட்டப்பட்ட பணியாக மாற்றினால் மட்டுமே, வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட்டு, சர்வதேச சந்தை வாய்ப்புகளை கைப்பற்ற முடியும்'' என்கின்றனர் தொழில்துறையினர்.
அதிநவீன இயந்திரங்கள்
பல்வேறு நாடுகளில் இருந்து, புதிய தொழில்நுட்பத்தில், முற்றிலும் மாறுபட்ட வகையில் தயாரிக்கப்படும் அதிநவீன இயந்திரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும் தொழிலை மேம்படுத்த, அதிக பொருட்செலவில் புதிய இயந்திரங்களை தருவித்து, நிறுவுகின்றன.
தொழிலாளர்கள் திகைப்பு
ஒவ்வொரு தொழில்பிரிவிலும், புதிய இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வரும் போது, அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் கூட திகைத்துப்போகின்றனர். தற்போது, கணினி சார் தொழில்நுட்பம் மாறிவருவதால், கட்டாயம் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர் மட்டுமே, அத்தகைய புதிய இயந்திரங்களை லாவகமாக இயக்க முடியும். இல்லாவிடில், தொழிலாளருக்கு, குறிப்பிட்ட காலம் பயிற்சி அளிப்பதும் கட்டாயமாகிறது.
ஒருங்கிணைந்த பயிற்சி தேவை
திருப்பூரில் பின்னலாடைகளை வடிவமைப்பது, புதிய டிசைன் உருவாக்குவது குறித்து பல்வேறு இடங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன. தொழிலாளர்களுக்கு, தொடர் பயிற்சி அளித்து தயார் செய்யப்படுகிறது. சாய ஆலைகளும், தொழிலாளர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கவும், திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர், தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்கவும் புதிய பயிற்சி மையத்தை துவக்கியுள்ளன; பிரின்டிங் பயிற்சி மையம் இல்லை.
தற்போதைய சூழலில், புதிய '3டி' மற்றும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் அமலாகி வருகிறது. புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் அமல்படுத்தும் பிரின்டிங் தொழில்கள், தொழிலாளர்களை தயார்படுத்த சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. புதிய இயந்திரங்கள் வந்தாலும், ஒருங்கிணைந்த பயிற்சி அளிப்பதன் மூலம், திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க, திருப்பூர் தயாராக வேண்டும்.
பல்வேறு தொழில் அமைப்புகள், பயிற்சி மையம் நடத்துவது போல், திருப்பூர் பிரின்டிங் நிறுவனங்களும், புதிய பயிற்சி மையத்தை திறக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.