/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட திருநங்கை தற்பலி சிற்பம்
/
தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட திருநங்கை தற்பலி சிற்பம்
தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட திருநங்கை தற்பலி சிற்பம்
தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட திருநங்கை தற்பலி சிற்பம்
ADDED : மார் 03, 2026 02:59 AM

உடுமலை: தமிழகத்தில் உடுமலை அருகே, முதல் திருநங்கை தற்பலி சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, கொழுமத்தில், குதிரையாற்றின் கரையிலுள்ள பாழடைந்த கோவிலில், வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, திருநங்கை தற்பலி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
கொழுமம் கோவிலில், ஒரு திருநங்கை, தன் தலையை தானே அறுத்துக் கொள்வது போன்ற சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
தற்பலி கொடுத்தவரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு, மக்களும், அரசும், கொடை அளிப்பது அன்றைய வழக்கம். இவ்வாறான பலிகளுக்காக கொடுக்கப்படும் நிலங்கள், 'உதிரப்பட்டி, நவகாணி, நெய்த்தோர்பட்டி, உதிரக்காணி' என அழைக்கப்படுகின்றன.
திருநங்கையின் சிற்பத்தில், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை அணிகலன்கள் உள்ளன. தலையில் அள்ளி முடிந்த அழகிய கொண்டை, நெற்றிச்சுட்டி, நெற்றிப்பொட்டுடன் கழுத்தில் கண்டிகை சரப்பளி ஆரம் ஆகிய அணிகலன்கள் உள்ளன.
ஒரு நீண்ட வாளை, கழுத்தின் பின்புறம் வைத்து அழுத்திய நிலையில் சிலை காணப்படுகிறது. இவர், கொழுமம், வீரசோழீஸ்வரர் கோவிலில் தேவரடியாராக இருந்திருப்பார் என கருதப்படுகிறது.
சிற்பத்திலோ அருகிலோ கல்வெட்டுகள் ஏதும் இல்லாததால், மேல் விபரங்களை அறிய இயலவில்லை. இச்சிற்பம், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது.
கொழுமம், வீரசோழீஸ்வரர் கோவிலில் உள்ள கொங்கு சோழ அரசர் வீரநாராயணரின், எட்டாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு ஒன்று இக்கோவிலின், 'திருவின் நங்கை' எனும் தேவரடியாரைக் குறிப்பிடுகிறது.
எனவே, 'மூன்றாம் பாலினத்தவர், திருவின் நங்கை எனும் பெயரில் இருந்திருப்பார்' என கருதலாம். அருகிலுள்ள குளமும் தேவரடியார் குளம் என்று அழைக்கப்படுகிறது.
தன் அரசனின் ஏதோ ஒரு போருக்காக, தன்னைத் தானே திருநங்கை பலி கொடுத்திருக்கலாம். இது, தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட முதல் திருநங்கை தற்பலி சிற்பம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

