/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்திர பதிவில் மாவட்ட அளவில் உடுமலை 3ம் இடம்
/
பத்திர பதிவில் மாவட்ட அளவில் உடுமலை 3ம் இடம்
ADDED : ஜன 22, 2024 12:02 AM
உடுமலை:உடுமலை சார்பதிவாளர் அலுவலகம், 2022- 23ம் நிதியாண்டில், 15,756 ஆவணங்கள் பதிவு செய்து, மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை, ஊத்துக்குளி, தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட, 15 இடங்களில், சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகம் அரசுக்கு அதிக வருவாய் தரக்கூடிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. பல்லடம் சார்-பதிவாளர் அலுவலகத்தின் கீழ், பல்லடம், பொங்கலுார் ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 39 கிராமங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், மாவட்டத்திலேயே அதிகளவில் பத்திரப்பதிவு பணிகள் நடந்து வரும் தாலுகாவாக பல்லடம் உள்ளது.
கடந்த, 2022- - 23ம் நிதியாண்டில், அதிக அளவில் பத்திரப்பதிவு பணிகள் பல்லடத்தில் நடந்துள்ளது.
இதன்படி, பல்லடம் பத்திர அலுவலகம், கடந்த ஆண்டில் மட்டும், 24,332 ஆவணங்களை பதிவு செய்து, திருப்பூர் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்துள்ளது.
இதற்கு அடுத்ததாக, 18,531 ஆவணங்களுடன் அவிநாசி இரண்டாம் இடத்தையும், 15,756 ஆவணங்கள் பதிவு செய்து, உடுமலை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
குறைந்தபட்சமாக, 3,008 ஆவணங்கள் பதிவு செய்து மூலனுார் சார் பதிவாளர் அலுவலகம் கடைசி இடத்திலும் உள்ளது.
கடந்த, 2022 -- 23ம் ஆண்டு வருவாய் அடிப்படையில், பல்லடம், பத்திர அலுவலகம் வாயிலாக, 115.14 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. அவிநாசி, 79.60 கோடி மற்றும் உடுமலை, 77.02 கோடி ரூபாயாக உள்ளது.
இவ்வாறு, அதிகப்படியான ஆவணங்கள் பதிவு செய்தது மற்றும் அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில், மாவட்ட அளவில் பல்லடம் பத்திர அலுவலகம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
கடந்த காலங்களில், ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகங்களிலும், தினசரி, 100 முதல் 200 டோக்கன் வரை வழங்கப்படுகின்றன.
இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில், 200க்கு பதில், 300 டோக்கன்கள் வழங்கலாம் என, சமீபத்தில் பதிவுத்துறை உத்தரவிட்டது.
இதனால், வரும் காலங்களில், பத்திரப்பதிவு அதிகரித்து, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.