/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் ஆதிக்கம்! 40 - 49 வயதுடைய வாக்காளர்கள் அதிகம்
/
உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் ஆதிக்கம்! 40 - 49 வயதுடைய வாக்காளர்கள் அதிகம்
உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் ஆதிக்கம்! 40 - 49 வயதுடைய வாக்காளர்கள் அதிகம்
உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் ஆதிக்கம்! 40 - 49 வயதுடைய வாக்காளர்கள் அதிகம்
ADDED : ஜன 17, 2025 12:16 AM

உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதியில், வயது வாரியாக வெளியிடப்பட்ட பட்டியலில், 40 முதல், 49 வயதுடைய நடுத்தர வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகளவு காணப்படுகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் துவங்கியுள்ளன. இதற்காக முக்கிய கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் கமிஷனும் வாக்காளர் பட்டியல் மற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில்,உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், கடந்தாண்டு, அக்., 29ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த, 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற ஆர்வம் காட்டினர். உடுமலை, மடத்துக்குளம் ஆகிய இரு தொகுதிகளிலும், ஆண்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகம் இடம் பெற்றிருந்தனர்.
இறுதி வாக்காளர் பட்டியலில், வயது வாரியாக வாக்காளர் பற்றிய விபரம் தெரியவந்துள்து.
உடுமலை தொகுதியில், ஆண்களை விட, பெண்கள், 11 ஆயிரத்து, 345 பேர் கூடுதலாகவும், மடத்துக்குளம் தொகுதியிலும், ஆண் வாக்காளர்களை விட, 6,599 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வயது வாரியாக வாக்காளர் பட்டியலில், 1976 முதல், 85 வரை பிறந்த, 40 முதல், 49 வயது வரை உள்ளவர்களும், அடுத்தாக, 50 முதல், 59 வயதினரும் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
உடுமலை தொகுதி
உடுமலை தொகுதியில், ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 771 ஆண்கள், ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 116 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 2 லட்சத்து, 68 ஆயிரத்து, 918 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில், முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள், 18 மற்றும் 19 வயதுடைய வாக்காளர்கள், 3,347 பேர் உள்ளனர்.
20 முதல், 29 வயதுடைய வாக்காளர்கள், 40 ஆயிரத்து, 4 பேரும், 30 முதல், 39 வரை, 47 ஆயிரத்து, 363 பேரும், 40 முதல், 49 வயதுடையவர்கள், 57 ஆயிரத்து, 294 பேரும், 50 முதல், 59 வயதுவரை, 54 ஆயிரத்து,708 பேரும் உள்ளனர்.
60 முதல், 69 வயது வரை உள்ளவர்கள், 36 ஆயிரத்து, 846 பேரும், 70 முதல், 79 வயதுடையவர்கள், 21 ஆயிரத்து, 30 பேரும், 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், 8,326 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
மடத்துக்குளம் தொகுதி
மடத்துக்குளம் தொகுதியில், ஒரு லட்சத்து, 16 ஆயிரத்து, 739 ஆண்கள், ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 338 பெண்கள், 18 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 2 லட்சத்து, 40 ஆயிரத்து, 95 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதில், முதல் தலைமுறை வாக்காளர்களான, 18 மற்றும் 19 வயதுடையவர்கள், 2,874 பேர் உள்ளனர். 20 முதல், 29 வயதுடைய இளைஞர்கள், 36 ஆயிரத்து, 374 பேரும், 30 முதல், 39 வயதுடையவர்கள், 42 ஆயிரத்து,632 பேரும் உள்ளனர்.
40 முதல், 49 வயதுடைய, 49 ஆயிரத்து, 120 பேரும், 50 முதல், 59 வயதுடைய, 49 ஆயிரத்து, 276 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
60 முதல், 69 வயதுடையவர்கள், 32 ஆயிரத்து, 569 பேரும், 70 முதல், 79 வயதுடையவர்கள், 18 ஆயிரத்து, 861 பேரும், 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 8,389 பேரும், இத்தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இப்பட்டியலில், 40 முதல், 49 வயதுடைய நடுத்தர வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகளவு காணப்படுகிறது.