/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுமதியற்ற கட்டடத்துக்கு 'சீல்'
/
அனுமதியற்ற கட்டடத்துக்கு 'சீல்'
ADDED : ஜூலை 22, 2025 11:19 PM
பல்லடம்; அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என, பல்லடம் ஊரக வளர்ச்சித் துறையை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கட்டட அனுமதி பெறாமல், விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் பொன்னையா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, பல்லடம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், ஊராட்சிகள் தோறும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், நகர்ப்புற ஊரமைப்பு சட்டம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகள் ஆகியவற்றின்படி, அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூடி சீல் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் பி.டி.ஓ., கனகராஜ் கூறுகையில், ''விதிமுறைகளை பின்பற்றாமல், அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கட்டட உரிமையாளர்கள், அவற்றை வரன்முறைப்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக, ஊராட்சிகள்தோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்பின், அனுமதி பெறாத கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 'சீல்' வைக்கப்படும் என்பதால், கட்டட உரிமையாளர்கள், அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.