/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறையாத நம்பிக்கை; குவிந்தன மனுக்கள்
/
குறையாத நம்பிக்கை; குவிந்தன மனுக்கள்
ADDED : அக் 14, 2024 11:57 PM

திருப்பூர் : பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மொத்தம், 333 மனுக்கள் பெறப்பட்டன.
தினக்கூலி குறைப்பு
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை துாய்மை பணியாளர்கள் அளித்த மனு:
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், துாய்மை பணியாளர், பாதுகாவலர்கள், 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிகிறோம். எங்களுக்கு, கலெக்டர் அறிவித்த தினக்கூலி, 725 ரூபாய் வழங்கப்படுவதில்லை. மாதம், 30 நாட்களுக்கு பதில், 26 நாட்களுக்கான சம்பள தொகை மட்டுமே வழங்குகின்றனர்.
சம்பள தொகைக்கு ரசீது, இ.எஸ்.ஐ., மருத்துவ கார்டு, பி.எப்., பிடித்தம் ரசீது, பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியன வழங்கவில்லை. ஒப்பந்த நிறுவனமான மேலாளர், துாய்மை பணியாளர்களை மதிப்பதில்லை. கலெக்டர் தலையிட்டு, குறைபாடுகளை சரி செய்யவேண்டும்.
ரோட்டோரம் கிணறு
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்:
தெற்கு அவிநாசிபாளையம் கிராமம், தொட்டிபாளையத்திலிருந்து கொடுவாய் செல்லும் ரோட்டோரம், ஆழமான பள்ளம் மற்றும் அருகிலேயே கிணறு உள்ளது.
அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த மாதம், அரசு பஸ் நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கிவிட்டது. அப்பகுதியில் சாலையோரம் தடுப்பு சுவர் அமைத்து, உயிர்ப்பலி விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவேண்டும்.
மனைப்பட்டா வேண்டும்
காணிக்கம்பட்டி மக்கள் அளித்த மனு:
தாராபுரம் தாலுகா, காணிக்கம்பட்டியில், வாடகை வீடுகளில், நெருக்கடியான சூழலில் வாழ்கிறோம். எங்கள் பகுதியிலேயே ஒரு ஏக்கர் காலி இடம், தனியார் பெயரில் கண்டிஷன் பட்டாவாக உள்ளது. 40 ஆண்டுகளாக எந்த பயன்பாடுமின்றி உள்ள அந்த இடத்தை வீடு இல்லாத எங்களுக்கு, வீட்டுமனை ஒதுக்கி, பட்டா வழங்க வேண்டும்.
பள்ளிக்கு கழிப்பிடம் தேவை
திருப்பூர் மாநகராட்சி, 8வது வார்டு கவுன்சிலர் வேலம்மாள்:
நேரு நகர் நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான நிலத்தை, மீட்க வேண்டும்; பள்ளி மாணவர்கள் பயன்பாட்டுக்கு கழிப்பிடம் கட்ட வேண்டும்.